அன்னை - பாடல்
அன்னையைப் போலொரு .. தெய்வமுண்டோ
அகிலத்திலே .... அன்பினைத் தந்திடும்
தாயவளே ..... அகிலத்திலே .....
அன்னையைப் போலொரு .. தெய்வமுண்டோ
அகிலத்திலே .... அன்பினைத் தந்திடும்
தாயவளே ..... அகிலத்திலே .....
அன்னை உன்னை வணங்குவதில்
அகமும் முகமும் மலர்கின்றேன் .
என்னை ஈன்ற தாயன்றோ?
எதிலும் உனக்கு நிகருண்டோ ?
அன்பும் பண்பும் புகட்டினாய்
அன்னை உன்னை என்றும்நான்
மறவா நிலையை எனக்கருள
மன்றில் உன்னை வேண்டுகின்றேன் . ( அன்னையைப் போலொரு ...)
நன்றி பலநாள் கூறிடினும்
நயந்தே நானும் நடந்திடினும்
நேயம் கொண்டு எனைவளர்த்த
நேசந் தனக்கு ஈடாமோ ?
உந்தன் அன்பு கிட்டிடிலோ
உயரும் எந்தன் வாழ்வுமன்றோ ?
இமயம் கூட எட்டிவிடும் .
இயல்பும் எனக்கு வாய்த்துவிடும். (அன்னையைப் போலொரு ...)
உதிரந் தன்னை உணவாக்கி
உண்மை அன்பை உணர்வாக்கி
உதிரா வண்ணம் வளர்த்தென்னை
உலகம் அறிய செய்திட்டாய் .
உணர்வும் உயிரும் நீயாகி
உள்ளம் சேர அரவணைத்துப்
பலவாய் நெறிகள் போதித்து
பண்பாய் எனையும் வளர்த்தாயே . ( அன்னையைப் போலொரு ....)
கருவாய் என்னைச் சுமந்தாயே .
கண்போல் என்னைக் காத்தாயே .
உன்னைப் போல யாருண்டு
உலகில் நீதான் கடவுளன்றோ ?
மண்ணில் பிறந்து மகவானேன் .
மாதா உன்னை மதித்திடுவேன் .
பண்ணில் பாடி மகிழ்ந்திடுவேன் .
பாதம் தன்னைத் தொழுதிடுவேன் . ( அன்னையைப் போலொரு ...)
அம்மா ' என்னும் சொல்லில்தான்
அகிலம் முழுதும் அடங்கிவிடும்
மகவாய் நானும் பிறப்பதற்கே
மகிமை பலவும் செய்தாயே .
உனக்காய்ச் சொல்லும் உன்னதங்கள்
உலகில் யார்க்கும் சொல்வதுண்டோ ?
கோவில் தெய்வம் நீயன்றோ ?
குடும்ப விளக்கும் நீயன்றோ ? ( அன்னையைப் போலொரு ....)
வாட விடாது எனைக்காத்த
வரமே நீதான் அன்னையன்றோ?
பாடிப் பாடிப் புகழ்ந்திடுவேன் .
பாத மலர்கள் வணங்கிடுவேன் .
கண்ணில் காணும் கடவுளன்றோ ?
மண்ணில் மாதா ' மகிமையன்றோ ?
விண்ணில் நிற்கும் விருட்சமன்றோ ?
பண்ணில் பாடும் பாவையன்றோ ? ( அன்னையைப் போலொரு ... )
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்