எங்குதானில்லை காதல்

எங்குதானில்லை காதல்..?

வளர்ந்த மகளுடன் அறையை பகிர்ந்துகொள்ளும் தம்பதியர் நடுவே
பரிமாறமுடியாமல் பாய்ந்தோடி வழிகிறது காதல்...

பிழைக்கச்சென்ற பரதேசத்தில் பொருள்நிமித்தம் இருக்க
குரலையும் உருவத்தையும் மட்டும் தரும் அலைப்பேசிகளின் வழியே கசிகிறது காதல்...

எல்லை தாண்டமுடியாமல் நிற்கும் சில மனங்களின் நிதானத்தில்
இருப்பை உறுதி செய்கிறது காதல்...

பிரத்யேக கணங்களின் நெருக்கத்தை
பொதுவெளியில் நினைவுபடுத்தும் நிகழ்வுகளில் சிலிர்க்கிறது காதல்...

பிள்ளைகளை ஏமாற்றி சமையலறையில்
பின்னங்கழுத்தை முத்திய சொடுக்கில்
படபடவென்று மூச்சிரைக்கிறது காதல்...

நண்பர்கள் மத்தியில் போட்டியில்வெல்ல
சிறுபிள்ளைத்தனமாக தூக்கியதில் கண்களில் மின்னுகிறது காதல்...

பிள்ளைக்கு பணம் அனுப்பாததை மறைத்து
வயதான மனைவியை மனமுடையாமல்
காத்த கிழவரிடத்தில் உயிர்க்கிறது காதல்...

இளம் மனைவியின் அபத்தங்களுக்கு முட்டுக்கொடுத்தபடி
காப்பாற்றும் கணவனின் நெஞ்சில் இருக்கிறது காதல்...

வேலையிழந்த கணவனின் மனம்
நோகாமல் தைரியம் தந்து காக்கும்
மனைவியின் சொற்களில் துளிர்க்கிறது காதல்...

குளிர்பனிநேர பயணங்களில் பேருந்தில் காற்று புகாமல்
காதுகளை மூடிக்கொண்டதை உறுதிப்படுத்தும் மனைவியின் குரலில் உள்ளது காதல்...

தைராய்டால் ஊதிய மனைவியின் உடலை கேலிசெய்யாமல்
மருந்துகளை நேரத்திற்கு எடுத்துக்கொடுக்கும் கரங்களில் காதல்...

கடந்துபோன குடும்பசண்டையில் திட்டிய வார்த்தைகளை
கவனமாக நினைவூட்டாமல் தவிர்க்கும்
பெருந்தன்மையில் வாழ்கிறது காதல்...

நெருக்கமான தருணங்களில் பின்வாங்கும் சமயத்தில்
இயல்பாக அணைத்து ஆசுவாசப்படுத்துகிறது காதல்...

நோகடிக்கும் சொற்களின் பின்னிருக்கும் பிரியத்தை உணர்ந்து உணர்த்தி மகிழும் உள்ளத்திலிருக்கிறது காதல்...

இதயவடிவ மோதிரத்திலும் அட்டையிலும் இல்லாமல் சிலசமயம் குழையப்பிசைந்த தயிர்சாதத்திலும் தகிக்கிறது காதல்...

எங்குதானில்லை காதல்..?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (15-Feb-17, 2:10 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 55

மேலே