தோல்வியின் வெற்றி

என் பெயர் வெற்றி. எனக்கு பெயரில் மட்டும் தான் வெற்றி ஆனால் வாழ்க்கையில் பல விஷயங்களில் தோல்வி தான். மொத்தத்தில் வெற்றி எனக்கு அறிமுகம் இல்லாத ஒன்று ஆனால் தோல்வி என்னுடன் இருக்கும் நண்பன் போல்.

நான் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் தான் படித்தேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு நிறைய ஓவியங்கள் வரைய வேண்டும் என்று ஆசை வந்தது. நிறைய ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியில் நடந்த ஓவியபோட்டியில் கலந்து கொண்டேன். போட்டியில் சுபாஷ் சந்திர போஸ்சை வரைந்தேன். பள்ளியின் ஆண்டுவிழாவின் போது வெற்றி பெற்றவர்களை அறிவித்தார்கள் அதில் எனக்கு மூன்றாம் பரிசு கூட கிடைக்கவில்லை. நான் தோல்வியை சந்தித்தேன்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தினமும் ஓவியங்களை வரைந்து பார்க்க ஆரம்பித்தேன். அவ்வருடம் நடந்த போட்டியில் கலந்துகொண்டு காந்தியையும், போஸ்சையும் வரைந்தேன் அதிலும் தோல்வியுற்றேன். பின்பு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதும் நடந்த ஒவியப்போட்டியில் கலந்துக்கொண்டு மீண்டும் தோல்வியை கண்டேன்.

நான் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது என் நண்பர்கள் என்னிடம் ஒரு சில உதவி கேட்பார்கள். அது என்னவென்றால், அவர்களின் ரெகார்ட்(RECORD) நோட்டில் என்னை படம் வரைந்து குடுக்க சொல்வார்கள்.
நானும் வரைந்து கொடுப்பேன் அது எனக்கு நல்ல பயிற்சியாக இருந்தது. அப்படியென்றால் இந்த வருடம் நடக்கும் ஓவியப்போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடலாம் என்று எண்ணி நம்பிக்கையோடு கலந்து கொண்டேன். ஒரு மேடையில் காமராஜரும், அண்ணாவும் பேசி கொண்டு இருப்பது போல் ஓவியம் வரைந்தேன். இம்முறை கண்டிப்பாக மூன்றாம் பரிசாவது எனக்கு கிடைக்கும் என்று எதிர் பார்த்தேன். ஆனால் இம்முறை தோல்வி அடைந்தேன். இனி ஓவியமே வரைய கூடாது என்றிருந்தேன்.

இவ்வளவு கஷ்ட பட்டும் தோல்வி அடைந்தேன். அப்படி என்றால் வெற்றி பெறுபவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று எண்ணி நான் கண்டிப்பாக மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் வகுப்பிற்கு சென்றேன். அவ்வருடம் நடந்த ஒவியப்போட்டியில் என் பள்ளி ஆண்டு விழாவில் மேடையில் அண்ணா உரையாற்றி கொண்டு இருப்பது போன்றும், காமராஜர், கலாம், எம்.ஜி.ஆர் ஆகியவர்கள் மேடையில் அமர்ந்து கொண்டு இருப்பது போன்றும் ஓவியம் வரைந்தேன்.

அதில் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. நான் பெற்ற முதல் வெற்றி அது தான். விழா முடிந்ததும் என் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை சந்தித்து பாராட்டினார். என் ஓவியத்தை பள்ளியில் அவர் அறையில் வைக்க போவதாக கூறினார்.

போட்டியில் முதல் பரிசு வென்றவரை விட அவருக்கு என் ஓவியம் பிடித்திருக்கிறது. அதை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது தான் நான் வெற்றி பெற்றுஇருக்கிறேன் என்பதை முழுமையாக உணர்தேன்.

நான் வெற்றி பெற்றதற்கு காரணம் என் தோல்விகள் என்று எனக்கு புரிந்தது. இது என் தோல்விக்கு கிடைத்த முதல் வெற்றி. என் தோல்விகள் தான் எனக்கு நிறைய பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறது.

இக்கதை வெற்றி பெற்றவனை விட தோல்வியுற்றவன் தான் சிறந்தவன் என்று கூறவில்லை. வெற்றி பெற்ற அனைவருக்கும் தோல்வி என்னும் பக்கங்கள் இருக்கும் என்பதை கூறுகிறது. வெற்றியை மட்டும் பார்க்காமல் அவர் அடைந்த தோல்விகளையும், கஷ்டங்களையும் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.

முடிந்தால் முயற்சி செய் , முடியவில்லை என்றால் பயிற்சி செய்.

வெற்றி நம்பிக்கை கொடுக்கும் , தோல்வி அனுபவத்தை கொடுக்கும்.

அனுபவமே சிறந்த ஆசான்.

எழுதியவர் : சரவணன் (16-Feb-17, 3:44 pm)
Tanglish : tholviyin vettri
பார்வை : 1433

மேலே