கன்னியவள் நான் மயங்கும் வர்ணஜாலம்

கன்னியே கனிமொழியே என்னருமைக் காதலியே
என் முன்னே நீ வந்து நிற்கும்போது -என்னவளே
உந்தன் பேரழகு வர்ணஜாலமாய் காட்சிதருவதேனோ
சிவந்த உன் மேனியில் முளைத்த வெண் தாமரைத்தானோ
பால்நிலவொத்த உந்தன் அழகு முகம்
அதில் மொய்க்கும் கருவண்டுகள் போல் காட்சிதரும்
உந்தன் கண்களிரண்டும் மூடி திறக்க,
வண்ண பட்டாம்பூச்சியாய் மாறியதோ மயங்குகின்றேன்
வஞ்சிக்க கொடியே உன் மேனியை மறைக்கும் சிற்றாடை
மஞ்சள் பட்டாடை என் மனதை மயக்குதடி பொன்மேனி
மருதாணி பூசிய உந்தன் கைகளிரண்டும்
சிவந்து பேசுதடி ஒரு காதல் மொழி
பின்னிய உந்தன் கார்மேகக் கூந்தல்
மண்ணையும் தொட்டு நீ அசைய ஆட
அங்கே பேசுது ஒரு மௌன மொழி
ஜல் ஜலென்றெழுப்பும் உந்தன் சலங்கை ஒலி
வெள்ளை விளி சங்கின் மென்மை ஒலி
என்னை வரவேற்கும் காதல் மொழி
உன் முகத்தை இப்போது நான் பார்த்தேன்
உந்தன் வில்போல் புருவத்தின் மையத்தில்
அந்த சிகப்பு கும்குமப் பொட்டு
பால்நிலவில் முளைத்த சிவப்பு ரத்தினம் போல்
என் மனத்தைக் கொள்ளைகொள்ளுதடி
மொத்தத்தில் நீ ஒரு வர்ண ஜாலம்
அந்த வானவில்லைத் தோற்கடிக்கும்
பிரமன் படைத்த அழகு ஆரணங்கு
உந்தன் அழகு பேசும் வர்ண ஜாலங்களுக்கு
இன்னும் வரிகள் தேடுகின்றேன் கவிஞன் நான்
கன்னியே ,கனிமொழியே எந்தன் காதலியே
நான் மயங்கும் வர்ண ஜாலமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Feb-17, 12:07 pm)
பார்வை : 76

மேலே