நறுமணம்
நேற்று மாலை, மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது...
எங்கள் இருவரைத் தவிர அந்த வீட்டில் யாரும் இல்லை.. பேத்தி அம்மா வீட்டிற்குச் சென்றதால் எங்களுக்கு ஒரு நீள் வெட்டி நாள்.
அதிசயமாக இருவரும் ஒன்றாக அமர்ந்து அந்தத் திரைப் பட முடிவை எதிர்பார்த்து சோபாவில் காத்திருந்தோம்.
'தவசியின்' இறுதியில் எல்லாம் நல்லதாக முடிந்து நாசர் திருந்திவிடுவார் என்று தெரிந்திருந்தாலும், அது முடியும் வரை அதுதான் முடிவு என்ற முடிவு தெரியாமல் அவ்விடத்தை விட்டு நகருவதாக இல்லை...
திடீரென்று அந்த அறை முழுக்க ஒரு நருமணம் பரவியது... கற்பூரமும், வாசனைப் பூவும் சேர்ந்த ஒரு சுகந்த மணம்... மனைவி வேகமாகச் சென்று வாசல் கதவைத் திறந்து பார்த்தார்... எதிர்/பக்கத்து வீட்டுக் கதவுகள் மூடியிருக்க வாசல் பக்கத்தில் இருந்து அந்த நறுமணம் வரவில்லை... வீட்டின் ஒவ்வொறு அறையாகச் சென்று பார்க்க எந்த அறையிலிருந்தும் அந்த வாசனை வரவில்லை... எல்லா இண்டு இடுக்குகளிலும் தேடிப் பார்த்தும் எங்கிருந்து அந்த வாசனை வருகிறது என்று தெரியவில்லை...
பூஜை அறையில் இருந்தும் இல்லை...
தீவிர சிந்தனையில் அந்த நறுமணத்திற்கான ஆராய்ச்சியில் எந்த முடிவும் கிட்டவில்லை...
'சரி, அந்த கிச்சன் சிம்மணி கொஞ்ச நேரம் போடு, போய்விடும்..' என்றேன்...
போய்விட்டது...
ஆனாலும் இன்று காலையும் 'ஏன்?' என்ற கேள்வி அங்கு உலாவிக் கொண்டிருக்கிறது...
அமானுஷ்யமாய்...
--- முரளி