நீதியைத் தேடி
நீதியைத் தேடி ....
கவிதை By பூ.சுப்ரமணியன்
கறந்த பாலில் நீர்
கடைந்த மோரில் தயிர்
உயிர் இல்லாத உலகம்
உடல் இல்லாத உயிர்
காய்ந்த சருகில் பசுமை
பட்ட மரத்தில் இலைகள்
தேடித்தேடி அலைந்தோம்
அன்பில்லா அன்னை
துன்பமில்லா வாழ்வு
ஆசையில்லா உறவு
இசையில்லா பாடல்
கரையில்லா நதிகள்
சிந்தனையில்லா மனது
நிந்தனையில்லா அரசியல்
தேடித்தேடி அலைந்தோம்
மனுநீதிச் சோழன் காத்த நீதி
மன்னன் கரிகாலன் வழங்கிய நீதி
காவியங்களில் காணும் நீதி
சுயநலமில்லா நீதியினை
தேடித் தேடி அலைந்தோம்
நீதி நிதியின் பின்னும்
பதவியின் பின்னும்
சுற்றிக் கொண்டு
மிரட்டலில் பயந்து
பதுங்கி நின்றுகொண்டு
சுயநலத்தில் சுகம் கண்டு
நீதி தொலைந்து கொண்டிருப்பதை
நாளிதழ்களிலே பார்க்கிறோம் !
தேடித் தேடியே காலம் தேய்ந்தது
தேடும் படலமோ நாளும்
முடிவில்லா கதையானது .
ஓடி ஓடி ஒன்றும் புரியவில்லை
ஓடும் நதியும் நிற்கவில்லை
கூடி கூடிப் பேசிப் பார்த்தும்
நாடிய நீதி தேவதை எங்கே ?
என்றாவது ஒரு நாளில்
குறிஞ்சி மலர் பூக்கும்
நீதிக்கு விடிவு கிடைக்கும்
அப்போது
நீதிதேவதை காலடியின் கீழே
நிதி பதவி மிரட்டல் சுயநலம்
எல்லாமே நசுங்கி விடும் !
வன்முறைக்கு விடைகொடுத்து
பொறுமைக்கு இடம் கொடுத்து
நீதிக்கு தலை வணங்குவோம்
அப்போது நீதியைத் தேடி
நாம் அலைய வேண்டாம்
நீதி தேவதை தோன்றுவாள் !