ஆனந்த யாழ் ---- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆனந்த யாழ்தன்னை மீட்டுகிறாள்
----- அலைபோல நாதங்கள் கேட்டிடவே !
கானகமும் சென்றுள்ளக் கணவனையும்
------ கனவினிலே நிறுத்தியுமே பாடுகின்றாள்
கானங்கள் தனைமறந்தே சோகத்தால்
------ காரிகையும் மனம்நோக நிற்கின்றாள்
தானங்கள் பலவாறு செய்கின்றாள்
------ தலைமகனும் வந்திடவே வேண்டுகின்றாள் !!


யாழ்தந்த இசைகேட்டுத் தலைவனுமே
------ யாங்கணுமே நின்றிடுவான் இவள்முன்னே !
பாழ்படுத்தும் தனிமையினை மாற்றிடவும்
------ பதியவனும் வேகமாக வருவானே !
தாழ்ப்பாளும் வேலைசெய்யும் தானாகத்
------- தாங்கிடுவான் கைகளிலே தலைமகளை !
ஆழ்த்திடுவான் மஞ்சத்தில் அன்போடு
------ அணைத்திடுவான் வாழ்த்தொலிகள் கேட்டிடவே !!!


தனிமையிலே வாடுகின்ற பெண்மகளைத்
------தவிக்கவுமே விட்டுவிட்டுச் செல்லாதே !
இனிமேலே யாழ்மீட்டல் வேண்டாமே
------ இல்லறத்தில் இணைந்திடுங்கள் ஆனந்தமாய் !
பனிகாலம் கொன்றுவிடும் இளமையினைப்
------ பந்தத்தைத் தந்துவிடு பாசத்தால் .
கனிநிகராம் பாவையிவள் சோககானம்
------ கணப்பொழுதும் கேட்காது பார்த்துக்கொள் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Mar-17, 12:13 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 61

மேலே