இனத்திற்காய் பூர்த்த வெள்ளைப்பூக்கள்
துணைவன் இல்லாதவள் என்றறிந்தும்
தாகம் தீர்க்க நினைப்போர் எத்தனையோ பேர்
விதவை என்று சுபகாரியங்களில்
விலக்கி வைக்கும் ஆடவர்
விதவையை வித்தியாசமாக பார்க்கும்
பார்வையை ஏனோ மூடி வைப்பதில்லை
என் வீட்டில் கடி நாயொன்று இல்லாவிடின்
தெரு நாய்கள் என்னை
பசி தீர்த்திருக்கும்
வெளி மின் விளக்கை அணைத்தால்
விடியும் வரை
என் வீட்டு செல்லப்பிராணிக்கும் தூக்கமில்லை
நல்லவர் வேஷம் போட்ட
கள்வர்கள் (காமுகன் ) விடுவதில்லை
துணைவியை பட்டினி போட்டு
தூரத்தில் பாசியாற நினைப்பவர்களே !
அவளையாவது ஊர் மேய விட்டு விடாதீர்கள்
தாத்தா வயசுக்காரனுக்கும்
தாக்காளி பொண்ணுமேல கண்ணு
எப்போ பார்த்தாலும்
தப்பான பக்கத்தையே பார்க்கின்றன
துணைவனை இழந்தும்
குங்கும பொட்டு வைக்க வேண்டியிருக்கு
கமுகர்களிடமிருந்து தப்புவதற்கு
பரிதாபம் பார்க்க தேவையில்லை
பாலிய பார்வைகள் பார்க்காது இருங்கள்
துணையில்லா வீட்டுக்கு
ஆணொருவர் வந்து போனால்
கதைகட்டும் சமுகம்
அன்று ஆணுக்கு நிகராக
சாதைனைகள் புரிந்த போது
மாலையிட்டதும் இதே சமுகம் தான்
வதை பட்டுக்கிடந்தாலும்
வந்து பார்க்க யாருமில்லை
மற்றவர் வீட்டுப்பாத்திரம்
தேய்த்தால் தான்
பட்டினிக்கு விடுதலை
சுற்றத்தாரின் சுடு சொல்லுக்கு அஞ்சினால்
சுடு காடு தான் கைகொடுக்கும்
உடலில் உயிர் ஊன்றியிருக்கும் வரை
மானத்தை மனபலமே வென்று நிற்கும்
சோதனை நிரம்பிய வாழ்விலும்
வேதனைகளை விரட்டிய வேந்தர்கள்
நில்லாத பொழுதினிலே
இந்த அவலங்கள் நிகழ்கின்றது
பொய் பேசி அலையும் வெள்ளை வேட்டிக்கார ர்களும்
இனத்தை விற்றுப்பிழைக்கும்
இரண்டர்கள் இவர்களே
எங்கள் வாழ்வை விழுங்கியவர்கள்
யாரோ இல்லாவிட்டால்
யாரெல்லாம் கொண்டாடுவார்களாம்
என்பதைப்போல அவர்கள் குதுகலத்துக்குள்
அகப்பட்டது எங்கள் வாழ்வு
கடத்தப்பட்ட கணவனின்
முடிவு அறியாமலும்
நடத்தப்பட்ட சித்திர வதைகள் மாறாமலும்
கண்ணீருக்கு காலம் பதில் சொல்லும்
என்ற அபிலாசையுடன்
எங்கள் தேடல் தொடர்கின்றது
உறுதி பூண்ட இனத்தில்
குருதி வடிந்த வனத்தில்
என்றும் உறுதி உருக்குலையாமலும்
அன்று அவன் கொடுத்த வீரம்
அவனிடமிருந்து கற்ற தருமம்
எங்களுக்கு விடிவைத்தரும் என்ற
நம்பிக்கையுடன் எங்கள் வாழ்வு
-மட்டுநகர் கமல்தாஸ்