உலகக் கழிவு + உள்ளூர் கழிவு =------

வழி தவறிய இரண்டு மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்…….
இரண்டிடமும்
கடல் பற்றிய கதைகள் இருந்தன…..
கடல் இல்லை.
-இலக்குவண்‘‘தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்பத்தூர் மலர்குளத்தில் போர்வெல் போடப்பட்டு அதன் முலம் புதியம்புத்தூர், நடுவங்குறிச்சி, சாமிநத்தம், ராஜாவின் கோவில் உள்ளிட்ட பல ஊர்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக போர்வெல் தண்ணீருடன் மாசு கலந்த குளத்து நீரும் சேர்ந்து சப்ளையானதால் பொதுமக்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டது. நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் உள்பட 200 பேர் பாதிக்கப்பட்டு புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி புதியம்புத்தூர்கீழத்தெருவைச் சேர்ந்த அழகர்சாமி இறந்தார்.”

‘‘மத்திய அரசுக்கு 747 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவன துணைத்தலைவர் வரதராஜன் கைது” தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் களை கட்டியுள்ளன.”

மேற்கண்ட இரு செய்திகளையும் சற்றேறக்குறைய இரு வார இடைவெளியில் வாசித்தபோது நமக்குள் சில வினாக்கள் தவிர்க்க இயலவில்லை.
•தூத்துக்குடி என்பது தமிழகதத்தின் இயற்கைத் துறைமுக நகரம். இந்த நகரத்திற்கென்று பண்டையகால சிறப்பும் உண்டு. தமிழர்களின் வணிகத் தளமாக இருந்த தூத்துக்குடி தற்போது ஆலைகளின் கழிவுகளால் சூழப்பட்ட தீவாய் மாறியிருப்பதற்கு யார் காரணம்?
•தூத்துக்குடியில் 1996ல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடங்கும் போதே, (அதாவது லண்டனை தளமாகக் கொண்ட வேதாந்தா பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் கிளை அமைப்பான ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக) கடும் எதிர்ப்பு கிளம்பி அது போராட்டமாகவும் மாறியிருக்கிறது. தாமிரத் தாதுவை இறக்குமதி செய்து, அதைப்பிரித்தெடுத்து தாமிரத் தகடு மற்றும் கம்பி உற்பத்தி செய்யும் இந்த ஆலையை திறக்கக் கூடாது. அப்படித் திறக்கப்பட்டால் அதுநிலம் மற்றும் கடல் வளத்தை நிச்சயம் மாசுபடுத்தும் என்று, தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபயணங்கள்…. கடையடைப்புகள் நடத்தப்பட்டன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள் பின்னர் சத்தமின்றி ஓய்ந்தன. இதன் பின்னணி என்ன?
•இந்த வேதாந்தா நிறுவனம்தான் உலகத்திலேயே பெரிய அளவுக்கு அலுமினியத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த அலுமினியத் தயாரிப்பான 13 லட்சம் டன்களில், 3,85,00 டன் உற்பத்தியை வேதாந்தா செய்கிறது. ஒரிசாவில் உள்ள ஆதிவாசிகள் பகுதியில், அலுமினியத்திற்கான கனிம வளத்தை ஜர்சுகுடா என்ற இடத்தில் வேதாந்தா கைப்பற்றியுள்ளது.(ஒரிய பழங்குடிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க நமது இளவரசர் அங்கு முகாமிட்டிருப்பதும் ஊரறிந்த ரகசியம்.) லாஞ்சிகார் பகுதியில் 50 லட்சம் டன் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையையும், 3,750 மெகா வாட் மின் உற்பத்தி ஆலையையும் அதே இடத்தில் நிறுவியுள்ளது. ஜர்சுகுடாவில் இன்னொரு பெரிய உருக்காலையை தொடங்கப் போவதாகவும் வேதாந்தா கூறி வருகிறது. இவை அனைத்துமே பழங்குடி மக்களின் பாரம்பரியமான செல்வங்கள். ஆக இப்படிப் பேரும் புகழும் கொண்ட, இந்திய மக்களை முன்னேற்றுவதைத் தவிர்த்து வேறொரு பாவமும் அறியாத(….?……) ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராகப் போராடுவதில் மக்களைக் காட்டிலும் அதிகமான தயக்கம் அரசியல் அமைப்புகளுக்கே உள்ளது. (பெரிய இடமல்லவா….. தேர்தலுக்கு நன்கொடை வாங்கவேண்டாமா….. சூழலாவது… மாசாவது….. அடபோங்கப்பா….)
•இப்போது வரி ஏய்ப்பு விவகாரம் அம்பலமானதும், போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன.(இது எப்படி அம்பலமாது என்பது ‘சிதம்பர‘ ரகசியம்) இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, அரசியல் கட்சிகளும், பல சமூக அமைப்புகளும் ஒன்று சேர்ந்து, 2010 ஜூலை 26ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது வரவேற்கத் தக்கதே.. இருந்தாலும் இப்போராட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு?
•மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்தியாவில் உள்ள நகரங்களில் எல்லாம் சுற்றுச்சூழல் சீர்கேடு எந்தெந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இந்தியா முழவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய 423 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. திறந்தவெளியில் மலம் ஜலம் கழித்தல், குவிந்து கிடக்கும் குப்பைகள், அசுத்தமான கழிவறைகள், நிரம்பி வழியும் சாக்கடை, தரமில்லா குடிநீர், வயிற்றுப்போக்கு-வாந்தி, உள்ளிட்டவைகளைக் காரணமாக வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3 மாதங்கள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியாவில் மிகவும் ஆபத்தான சுற்றுச்சூழல் சீர்கேடான நகரங்களில் தொழில் நகரமான தூத்துக்குடி முதல் வரிசை பெற்றுள்ளது. இது அனைத்து தினசரி நாளிதழ்களிலும் வந்துள்ளது. மாநகராட்சியாக உயர்ந்துள்ள தூத்துக்குடி நிர்வாகம் இன்றுவரையில் இதற்கான பதிலை வழங்காதது ஏன்? அப்படியானால் இந்த ஆய்வு முடிவை மாநகராட்சி ஏற்றுக்கொள்வதாகத்தானே அர்த்தம்.

தூத்துக்குடியில் சுற்றுச் சூழல் மாசு என்பது ஏதோ நேற்று முன்தினம் தொடங்கியது அல்ல…. கடந்த இருபதாண்டுகாலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் நேடியான… மறைமுகமான முதலீடுகளாலும் அவைகளின் ஏற்றுமதி – இறக்குமதிகளாலும், முத்துநகர் மெல்ல மெல்ல பன்னாட்டு நிறுவனங்களின் குப்பைத்தொட்டியாகிக் கொண்டிருக்கிறது.

இதற்கு தக்க சான்று.. 2005- ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான 1000 கன்டெய்னர்களை சுங்க இலாகாவினர் பரிசோதனை செய்தபோது திடுக்கிட்டனர். 25,000 டன் “காகிதக் கழிவுகள்’ என்று கூறி ஐ.டி.சி. நிறுவனம் இறக்குமதி செய்த கன்டெய்னர்களில் இருந்தவை பழைய பேப்பர்களும் காகிதக் குப்பைகளும் என்று நம்பி அந்தக் கன்டெய்னர்களை அனுமதித்த சுங்க இலாகாவினருக்கு அதிலிருந்து வெளிப்பட்ட துர்நாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (இதற்குள் பல “கன்டெய்னர்கள்’ வெளியேறிவிட்டன என்பது வேறு விஷயம்.) ஆனால் சுங்க இலாகாவினரிடம் நாற்பது கன்டெய்னர்கள் சிக்கின. பரிசோதித்துப் பார்த்ததும் அவர்கள் அதிர்ந்தனர்.

அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி நகரத்தின் குப்பைக்கூளங்கள் இந்தக் கன்டெய்னர்களில் நிரப்பப்பட்டு, இந்தியாவில் கழிவுகளாகக் கொட்டுவதற்கு இதுபோல திருட்டுத்தனமாக அனுப்பப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் பைகள், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள், உபயோகித்துத் தூக்கி எறிந்த பேட்டரிகள், கக்கூஸ் குப்பைகள், மிதியடிகள், உபயோகித்து எறியப்பட்ட ஆணுறைகள் என்று அந்தக் கன்டெய்னர்களில் குத்தி அடைக்கப்பட்டிருந்தன. அதாவது அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க இந்தியா போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளுக்கு இதுபோல நகராட்சிக் கழிவுகளைத் திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்வது வழக்கம் என்பதும், இதற்காக பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் தொகை கூலியாகப் பேசப்படுகிறது என்பதும் திடுக்கிட வைத்த தகவல்கள்.

இது கண்டுபிடிக்கப்பட்டதும் எதிர்பார்த்ததுபோல ஐ.டி.சி. நிறுவனம் “எவர்கிரீன் ஸ்பெஷாலிட்டீஸ்’ நிறுவனத்தின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்த்தது. அந்த 40 கன்டெய்னர்களும் அஜ்மான் நாட்டுக்கு அனுப்பப்பட்டன. அந்த அரசு எச்சரிக்கை செய்து கப்பலை அப்படியே திருப்பி அனுப்பிவிட்டது. மீண்டும் தூத்துக்குடி துறைமுகத்துக்குத் திரும்பி வந்த கன்டெய்னர்களை நியூஜெர்சிக்கே திருப்பி அனுப்பும்படி மத்திய மாசுக் கட்டுப்பாடு ஆணைய நிபுணர்கள் அறிக்கை அளித்ததும், அதைத் திருப்பி அனுப்பக்கூடாது என்று ஐ.டி.சி. நிறுவனம் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவின்மீது தீர்ப்பளித்த நீதிபதிகள் இருவரும் மிகவும் தெளிவாக சில விஷயங்களைக் கூறி இருக்கிறார்கள். “”தங்களுக்குத் தெரியாமலோ, கேட்காமலோ “எவர்கிரீன் ஸ்பெஷாலிட்டீஸ்’ நிறுவனம் அந்தக் குப்பைக் கழிவுகளை அனுப்பி இருக்கிறது என்கிற ஐ.டி.சி.யின் வாதம் உண்மையானால், அந்தக் கன்டெய்னர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு அப்படியே திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். இவர்கள் ஏன் அஜ்மான் நாட்டுக்கு அனுப்பினார்கள்? வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது நகராட்சிக் கழிவுகளைக் கொட்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளைத் தங்களது குப்பைத் தொட்டிகளாக்க நினைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நமது நாட்டின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடாது என்கிற வளர்ச்சி அடைந்த நாடுகளின் மனோநிலை ஆபத்தானது” என்று தங்களது தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் நீதிபதி தர்மராவும், நீதிபதி தமிழ்வாணனும்.

ஐ.டி.சி. நிறுவனம் உடனடியாக அந்தக் கன்டெய்னர்களைத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டிருப்பதுடன், நீதிமன்றச் செலவாக ரூ. 50,000-ம் அபராதம் விதித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 12 வாரத்திற்குள் இந்தச் சதியில் தொடர்புடைய அத்தனை அதிகாரிகள் மீதும் கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடரவும் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இதுபோல எத்தனை பன்னாட்டு நிறுவனங்கள் இறக்குமதி என்கிற பெயரில் பன்னாட்டுக் குப்பைக்கூளங்களை இந்தியாவில் கொண்டுவந்து கொட்டி நமது சுற்றுச்சூழலைக் கெடுக்கிறார்களோ………….யார் கண்டது?

மாலைநேரங்களில் காத்தாட நடக்கலாம் என எண்ணி தூத்துக்குடியில் புறநகர் பகுதிகளில் நடந்தால் உப்புக்காற்றையும் மீறி தாமிர உருக்காலையின் புகை மண்டலங்கள் நம்மைத்தாக்கும். பாவம் தூத்துக்குடி மக்கள் உப்புக்காற்றுக்கும், உருக்காலையின் புகைமண்டலத்திற்கும் இடையில் சிக்கி உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். மஞ்சள் காமாலையும் வைரஸ் காய்ச்சலும் தூத்துக்குடி மாநகரத்தின் நாகரீக வளர்ச்சிக்கான சொத்தாகி விட்டன. நகராட்சி வளர்ந்து மாநகரான போதிலும் நாளும் சூழும் புகை மண்டலங்களை நீக்க வழியின்றி மாநகர நிர்வாகம் தூங்குகிறது.

இது தூத்துக்குடி மாநராட்சியில் மட்டும் அரங்கேறும் அட்டுழியமல்ல.. மாவட்டம் முழுதும் இது போல பலப்பல உள்ளன. மாவட்டத்தின் வடக்கே வைப்பாறும், தெற்கே தாமிரபரணியும் ஓடிய போதும் மாவட்டம் முழுதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவில்பட்டியில் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் குடிக்க லாயக்கற்றதான பிறகு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மட்டுமே மாவட்டத்தின் முழு நீராதாரமாக இருப்பதால் எட்டயபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் போன்ற தாலுகாக்களில் குடிநீர் தட்டுப்பாடு கொதித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் வைப்பாற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டதால் இருக்கன்குடியில் தொடங்கி சிப்பித்துறை வரையில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் படுபாதாளத்திற்குச் சென்று விட்டது.

குறுமலையிலிருந்து நீரூற்றாக வரும் தாழையூத்து மூலிகைத்தன்மை கொண்டது. இந்த நீரைக் குடித்தால் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை சுற்று வட்டார கிராம மக்களிடம் உள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த வட்டாரத்தில் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் தாழையூத்து தண்ணீரைக் களவாடி மினரல் வாட்டராக்கி விற்று காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்

சோற்றுக்கே இங்கு பஞ்சம்” என்று பாடிய பாரதி இன்று உயிருடன் இருந்திருந்தால்

”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – குடி

தண்ணீருக்கே இங்கு பஞ்சம்” என்று பாடியிருப்பான்.

சுத்தமான காற்றை, சுத்தமான தண்ணீரை விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள கோகாகோலா நிறுவனத்தின் குடிநீர் ஆலை எடுக்கும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 7.5 பைசா கொடுத்துவிட்டு அதை நம்மிடமே ரூ12க்கும் 14க்கும் விற்கிறார்கள். இப்போது தூத்துக்குடியின் நதிகளான வைப்பாற்றிலும், தாமிரபரணியிலும் கூடைகொண்டு மண் அள்ளவில்லை; பொக்லைன் கொண்டு தோண்டுகிறார்கள். தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை மருதம் நெய்தல் ஆகிய நான்கு நில அமைப்புகள் கொண்ட மாவட்டங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்யாகுமரி ஆகிய மூன்றுதான்.. இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்புரட்சியால் இந்த மூன்று மாவட்டங்களும் ஐந்தாம் திணையான பாலைத் திணையை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

1905-ல் இது மண்ணில் தொடங்கிய சுதேசி இயக்கம் என்னானது? சிதம்பரமும், திலகரும் செய்த தியாகம் என்னானது? ஒரு சிதம்பரம் அந்நிய நிறுவனங்களை விரட்டப் பாடுபடடார். இன்னொரு சிதம்பரம் அந்நிய நிறுவனங்களை இராஜ கம்பளம் விரித்து வரவேற்கிறார்.

நாய்வாலை வெட்டி நாய்க்கே உணவாகப் போடுவது போல நம்மைக் கொள்ளையடித்து நமக்கே வேலை தருகிறார்கள். சுதேசியத்தை மீண்டும் புதிய பார்வையில் கொண்டுவர வேண்டும். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் அமெரிக்காவின் காலடியில் இருந்த கொண்டு தங்களது சுய முயற்சியால், சுயமாகத் தலைநிமிர முடியும் என்று லத்தீன அமெரிக்கவில் கியூபா உட்பட பல நாடுகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்ற போது நம்மால் ஏன் முடியாது?

(பசுமைத்தாயகம்

.

எழுதியவர் : (16-Mar-17, 8:21 pm)
பார்வை : 255

சிறந்த கட்டுரைகள்

மேலே