அம்மா

அம்மா
உனை இழக்கும் தருணம்
கூடிருக்கும் விருட்சம் மறந்து
குஞ்சுகளின் நினைவாய்
இரையினை அலகேந்த
இலக்கறியாது பறக்கும் பட்சியாய் மனது!

உடுபோரம் தூளி கட்டி
உதட்டோரம் மெட்டு போட்டு
உறக்கத்தின் கிறக்கத்திலும்
உச்சரிப்பாய் தாலாட்டு!

உன் அன்புக்கடலில்
மூழ்கியும் சாகாத நான்
உன்நினைவலைகளில்
மிதந்தும் சாகிறேன்!

உற்றாரும் உறவினரும்
உண்டுறங்கி இளைப்பாற
கிளை செழிக்க தனைக்குறுக்கி
தரைக்குள்ளே தனைப்புதைத்து
முகம் காட்டா ஆணிவேராய்
சமையலறை உலகமென
சிறைப்படுத்திக்கொண்டவளே!

காலம் எனை இடறிவிட்டு
தலைகீழாய் தள்ளியதால
அபரிதமான காற்றிருந்தும்
கரைதொட்ட மீனின் கடைசி மூச்சாய் எனது!
ஜீவராசிகள் சஞ்சரிக்கா
உயிர் கோளத்தில்
உயிர்விடக் காத்திருக்கும்
ஒரே ஓர் இறுதி மனிதனாய் நான்!

எழுதியவர் : (30-Mar-17, 8:56 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 108

மேலே