அவள் இங்கிலீஷில் சிரிக்கிறாள்

அவள் இங்கிலீஷில் சிரிக்கிறாள்
எப்படி தமிழில் கவிதை எழுதுவேன் ?
அவள் தமிழில் சிரிக்க முயன்றாள்
திரைப்படக்காரன் வந்தான்
நடிக்கக் கூட்டிச் சென்று விட்டான்
என் கவிதை தொடங்கும் முன்னே நின்றுவிட்டது
என்ன செய்வேன் ?
நான் தமிழில் சிரிக்கிறேன் தமிழில் பேசுகிறேன்
என்னை எழுதடா பேர்ப்புள்ள என்றாள் என் பொக்கைவாய்ப் பாட்டி !
சந்தங்கள் தரும் வெத்தலை இடி சத்தத்தை எழுதவா
பொட்டலம் திறந்து பாளைப் புகையிலை போடும் அழகைச் சொல்லவா
இளம் வெத்திலை இதழில் மின்னும் புன்னகை எழிலைச் சொல்லவா
நெருக்கமான சுருக்கம் விழுந்த முதுமை முகத்தை எழுதவா
பார்வை குறைந்தாலும் கனிவு குறையாத கவிதைக் கண்களை எழுதவா
எதை எழுத என்றேன் !
பாட்டி தமிழில் சிரிக்கிறாள் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Apr-17, 9:06 am)
பார்வை : 1533

மேலே