நிலவு சுடுகிறது

=================
நிலவு சுடுகிறது நட்சத்திர பலகாரம்
நினைக்க இனிக்கிறது நட்டநிசி அலங்காரம்
நிலவு சுடுகிறது நீயில்லாத இந்நேரம்
நினைவை கெடுக்கிறது பட்டமர அலங்கோலம்

வான மேகங்களாய் தவழ்ந்திருந்தோம் அன்று
வாழ்வில் சோகங்களால் தவித்திருக்கோம் இன்று
கான குயிலேனவே இசைத்திருந்தோம் காதல்
கானல் நீரெனவே குடித்துவிட்டோம் தேடல்

நேரில் கண்டுவிட புல்லாங்குழல் ஊதும் கண்ணாள்
நிலத்தில் கோலமிட்டு பல்லாங்குழி ஆடும் பெண்ணாள்
ஊரில் தேவதைகள் உலவுவதை நிச்சயிக்கும் தருணம்
உறவில் தேவையின்றி ஊடுருவ வைத்துவிடும் மரணம்

கண்களில் மூழ்கி இதயத்தைக் கொத்தும் கழுகு
காதலின் வடிவில் உதயத்தை மறைக்கும் பொழுது
புண்படத் துடிக்கும் வாழ்வினில் எல்லாம் பழுது
புலவனாய் மாறி கவிதைகள் என்பதை எழுது.

நெருப்பினில் கைகள் விழுந்த பின்னாலும் குளிர்ச்சி
நீ என் அருகிலிருந்து காதல் பொழிந்த மலர்ச்சி
வெறுப்புடன் வாழ்தலில் வேதனை செய்கின்ற புரட்சி
வெண்ணிலா சுடுவதில் சாதனை செய்கின்ற வறட்சி.
(கஸல் மாதிரி)
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Apr-17, 10:11 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 84

மேலே