கண்ணன் கலி - பொன்னூசல்
கோகுலக் கண்ணனின் குழையு மாடவே !
மேகநி றத்தினன் மேனி ஆடவே !
மோகநா தந்தலை முடியு மாடவே
ஏகமா நாயகன் ஏறி யாடவே !
காதலின் கண்ணனின் கழலு மாடவே
மாதவன் தோழனின் மடியு மாடவே
போதமே பொங்கிடப் போதை யூறிடும்
ஊதிடும் வேய்ங்குழல் ஊச லாடவே !
காற்றினில் கண்ணனின் காது மாடவே
கீற்றிடை கொண்டவூர்க் கிழத்தி யர்களின்
தோற்றமா கனவிலே தோன்றும் காதலன்
ஊற்றணை நகையுடன் ஊச லாடவே !
உடையெலா மாடவே ஊது குழலுடன்
இடையுடை மேகலை இசைய ஆடவே !
மடையிலா வெள்ளமாய் மன்னும் புன்னகை
உடையவன் கிருஷ்ணணும் ஊச லாடவே !
-விவேக்பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
