புகழ்ச்சி

மஞ்சள் நிற காகமொன்று
வந்தமர்ந்தது
சிவப்பு நிற பலாமரத்தில்
நீலநிறப்பூனையொன்று
விரட்டிப்போனது
பச்சைநிறத்திலான
எலியொன்றை
நாவல்நிற மண்ணில்
பூத்திருந்த பூக்களின் நிறத்திற்கு யாதொரு பெயருமில்லை
தண்ணீரில் நீந்தத் தெரியாத
சில மீன்கள்
தரையால் நடந்துவந்துகொண்டிருந்தன
தூய வெள்ளை நிறத்தினாலான தோலையுடைய வாழைப்பழத்தை
தன் கருவில் வளரும் சிசுவுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்
ஒரு மூதாட்டி
பலவர்ணங்களில் சிந்திக்கொண்டிருந்தது
அதோ அந்த விபத்தில் இறந்துபோனவர்களின்
இரத்தம்
சிலந்தி வலையில் கட்டப்பட்டிருந்த வாளியில்
சிலர் நீர் இறைத்துக்கொண்டிருந்தனர்
அருகில்
மிக அருகில்
இலக்கியவாதிகள் சிலர்
தம்மை புகழ்ந்து
கொண்டிருந்தபோது.