அப்பாவின் மிதிவண்டி

======================
சாலையே இல்லாத எங்கள் வாசலுக்கு
ஒற்றையடி பாதை வழியே வந்துநிற்கும்
விலைமதிப்புமிக்க வாகனம்
அப்பாவின் மிதிவண்டி.
அப்பாவின் பாத விசையில் எங்கள்
கனவுகளை கடைத்தெருவிலிருந்து
இழுத்து வருகின்ற சொர்க்கத்தின் தூதுவன்
மழைக்கு முன்னரான இடி முழக்கமாய்
அப்பாவின் வருகையை அறிவித்துவிடும்
அதன் “லொடக்” “லொடக்” சத்தம்
எச்சரிக்கை மணியான பொழுதுகளில்
எங்கிருந்தாலும் கைக்கு வருகின்ற பாடப்புத்தகங்கள்
எங்கள் முதுகு வீங்குதல்களை
தடுத்து நிறுத்தியிருக்கின்றது
ஊருக்குள் நல்ல மிதிவண்டி
திருத்துனன் என்று பெயர்வாங்கிய
கடைக்காரன் ஒட்டைவிழும் குழாய்களில்
ஓட்டுப்போட இடம்தேடி
களைத்து மிரள்வது
அப்பாவின் மிதிவண்டி கண்டே .
வறுமையின் அடையாளம் என்ற
ஒற்றை வரியில் முடிந்து விடுவதல்ல
அப்பாவின் மிதிவண்டி , அது
வாழ்க்கையில் அப்பாவை மட்டுமல்ல
அப்பாவால் எங்களையும்
ஏற்றிவிட்ட ஏணிப்படி .
*மெய்யன் நடராஜ்