எழுதாத கவிதை நீ --- புதுக்கவிதை

எழுதாத கவிதை நீ !!! --- புதுக்கவிதை .

சிறப்பு கம்பதாசன் சான்றிதழ் போட்டியாளர் .


எழுதாத கவிதை நீ அம்மா ! என் அம்மா !
என்றென்றும் காப்பவளே ! என்னுயிராய் உறைபவளே !
போற்றிடவே சொற்களையும் தேடுகின்றேன் ! தாயே !
பொல்லாத உலகினிலே நல்லவளாய் வளர்த்தவளே !


கருவையும் சுமந்து கண்போல் காத்தவளே !
உருவினை காண உயிரைப் பெற்றுமே
பசியினை மறந்துமாய்ப் பலகலை புகட்டிப்
பாசம் தந்து பண்பை ஊட்டியவளே !!



ஆடைகள் அணிய அன்புடன் மனத்தில்
ஓடையாய் மகவை ஒப்புமை உணர்த்தியும்
அழுதிடும் குழந்தை ஆறுதல் பெறவுமே
நழுவிலா உணர்த்தி நன்னெறி அடையச் செய்தவளே !!



சீருடை உடுத்திச் சீராய் இன்பம்
பாருடைத் தவமாய்ப் பாசம் தந்தவளே !!!
விடலையின் பருவமும் விலகாத் தோழியாம்
கடவுள் நெஞ்சமே கருத்தென நடத்தியவளே !!!



பணிபுரி விடத்திலும் பணிவிடை மறவாது
அணியெனத் துதித்துமே அருளை வேண்டி
உண்மையில் நலத்தை உள்ளுள் நினைத்து
எண்ணும் ' தாய்மை ' என்றும் வாழ்க !!!
நீயொரு எழுதாத கவிதையன்றோ !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-May-17, 6:37 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 89

மேலே