தனித்து சாய்ந்த படகு

ஒளிகூடிய விண்மீன்கள்
இன்னும் ஓய்ந்தபாடில்லை
வாகனச் சத்தம்

மனமுடைந்து கைவிட்டேன்
தோளில் வந்து அமர்கிறது
பட்டாம்பூச்சி

காற்றில் புரண்ட பக்கங்கள்
திருப்பி பார்க்கையில் புதிதாய்
அதே கவிதை

கூடு திரும்பும் பறவை
கிளைகளுக்குள் நுழைகிறது
அந்திச் சூரியன்

கன்றுடன் வந்த பசுமாடு
முகர்ந்து பார்க்கிறது.... வீதியில்
பால்பாக்கெட்

வெப்பச்சலனம்
அவளின் பின்னால் தொடர்கிறது
என்னோடு மழை

இரவில் மின்தடை
வியர்த்தொழுக சொட்டுகிறது
தண்ணீர்க் குழாய்

நீட்டலும் சுருக்கலுமாக
ஒருவழியாகி திரும்புகிறேன்
சலூன்கடை கண்ணாடிகளில்

தீர்ந்து போன நீர்க்குடுவை
நால்வழியில் மெல்ல நிரம்புகிறது
கானல்நீர்

ஆழ்கடல் அமைதி
புரியாத மொழி விளங்கும்முன்
துப்பாக்கிச் சத்தம்

இனப்பெருக்க காலம்
மெல்ல அதிகரிக்க தொடங்கியது
சாராய வாடை

தனித்து சாய்ந்த படகு
எதிர்புறத்திலிருந்து வருகிறது
கொஞ்சல் சத்தம்

எழுதியவர் : கி. கவியரசன் (3-May-17, 11:44 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 104

மேலே