உழைப்பு தருமே மதிப்பு --- இன்னிசை வெண்பாக்கள்
உழைப்பு தருமே மதிப்பு --- இன்னிசை வெண்பாக்கள்
மழைவரும் நேரம் மனமெங்கும் இன்பம்
பிழையின்றி மாரி பிசகாது வந்தே
தழைக்கும் தரிசுகளும் தந்திடுமே மாற்றம்
உழைப்பாளர் நெஞ்சம் உயர்வு .
உயர்ந்திட நாளும் உழைப்பும் உலவ
முயற்சியால் மேற்கொள்ள முத்தான மாரி
தயங்காது மண்ணில் தவறாது பெய்தே
வியனென நிற்கும் விடிவு .
விடிவும் தருமாம் விடிவெள்ளி மாரி
வடிவுடன் வந்திட வாட்டமும் நீங்கும்
கொடியிடை மங்கை குதூகலம் காண
இடியுடன் பெய்திடும் ஈங்கு .
ஈங்கின்றே பெய்திட்ட ஈடிலா விண்மழை
தீங்குகள் போக்கிட திக்கெலாம் செந்நெல்லும்
பாங்காய் விளைந்திட பாதம் தொழுதிட
ஆங்காங்கே வந்ததே அன்பு .
அன்பினால் காலத்தால் ஆறாகப் பெய்திடுவாய்
நன்மைகள் நோக்கி நலம்பல நல்கிட
என்றுமே வேண்டுமே எத்திக்கும் வான்மழை
நன்றென மண்ணிலும் நல்கு .
நல்குவாய் நேரத்தால் நன்செயும் மேம்பட
பல்கியும் நிற்பாய் பரவச நேசத்தால்
சில்லெனப் பெய்யும் சிறப்பாம் மழைநீரே
மல்கிட வேண்டும் மரபு .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
