”ஆகாயம் ஓர் ஆல்பம்”

கொடுத்த ஒரு படத்துக்கு ஏற்றபடி எழுதும் கவிதை படக்கவிதை எனப்படும். அனேகமாக பல இணையதள இதழ்களெல்லாம், தற்போது ஏதாவதொரு படத்தைப் போட்டு, இதற்கு கவிதை எழுதுங்கள் என்கிற வழக்கம் அதிகமாகத் தென்படுகிறது. வல்லமை மின்னிதழ் நடத்திய படக்கவிதைப் போட்டிக்கு என்னுடைய சமர்ப்பணம்.
=====================
”ஆகாயம் ஓர் ஆல்பம்!”
=====================
மண்ணிலிருந்து ஆகாயத்தைப் பார்…நம்
எண்ணமும் விண்ணைத் தொடுமப்பா..!
வான வெளியை வியந்து நோக்கின்..
மனதுக்குள் சிந்தனைபல கிளர்த்தெழும்..!
விண்ணும் முகிலும் காதல்கொண்டு விளையாட..
மண்ணும்மலையும் மறைந்திருந்து பார்க்கும்..!
மேகம் நாணமுடன் விண்ணை நெருங்கி..
மோகம் கொள்ளு மப்போது..!
மண்ணில் வாழும் மனிதரை நோக்கி..
கண் சிமிட்டும் விண்மீன்கள்..!
கவர்ச்சிமிகு கன்னியரின் கார்குழல்போல்
அசைந்தாடும் மேகக் கருங்கூட்டம்..!
மதிமயக்கும் விண்ணை மனதார வாழ்த்த
மலையேறிச் செல்லும் வெண்முகிலழகு..!
எதிரொலி கொடுக்கும் இடியின் வாழ்த்தால்
மறுஒலிகேட்டு மகிழு மனைத்தும்..!
சின்னக் குழந்தைகள் கிறுக்கிய ஓவியமாய்
மின்னல் கோடுகளின் மாலைதெரியும்..!
மலை முகட்டை மழைத் துளியால்
தலை நனைக்கும் வானமாவாய்நீ..!
நிலவுக்கு அதன் அழகைக் காட்டும்
நிலைக் கண்ணாடி போல்நீ..!
வானமுனது ஓங்கார இரைச்சலில் ஆழ்ந்ததில்
மனமெனது அகங்காரம் மெளனமாகிறது..!
மலையின் மலைப்பான இயற்கைச் செழிப்பில்
மலைத்தெழும் கற்பனைகள் ஏராளம்..!
உவமை தேடும் கவிஞருக்கு..ஆகாயம்
உன்னை விட்டால் வேறு ஆருமில்லை..!
உச்சிவானம் பற்றியே உறக்கமிலாச் சிந்தனையுடன்
மெச்சியுனைப் புகழாத கவிஞரிலர்..!
ஆகாயமொரு தமிழ்த்தோட்ட மதில்…விண்மீன்கள்
ஆகும் புலவர்களின் பாக்கூட்டம்..!
அத்துணைக் கவிஞனின் கற்பனைக்கு விருந்தாகிய
ஆகாயம்…நீயொரு “ஆல்பம்”