இந்த மனிசங்களே இப்டித்தான்

காலை நேரத்து வெயில் என் முகத்தில் பட்டு அது உறைக்கும் வரை தூங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். வழக்கத்துக்கு மாறாக இன்னக்கி ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல.
நேத்து நைட் ஒரு திருடன ஸ்மெல் பண்ணி அவன வெரட்டிக்கிட்டு ஒடினேன். அவன் வளச்சு வளச்சு ஓடி 4,5 தெருவ கடந்துட்டான். என்ன விட வேகமா ஓடினான். ஓடும்போதே கல்லால என்ன அடிக்கிற மாதிரி பாவன செஞ்சான். ரொம்ப தூரம் வந்து ஒரு தெரு முக்குல போய் நின்னுக்கிட்டு நெஜமாவே கல்ல எடுத்து என்ன குறி பாத்து அடிச்சான். நல்லவேள நான் தப்பிச்சுட்டேன். இல்ல அவன் குறி தப்பிருச்சு. மத்தபடி எனக்கு பயமெல்லாம் ஒன்னும் இல்ல. நான் ஒரு ஆம்பள சிங்கம்னு இல்ல நாய்க்குட்டின்னு அவனுக்கு இன்னொரு நாள் காட்டிக்கலாம்னு திரும்பி வந்துட்டேன்.
அந்த அசதியிலதான் இவ்ளோ நேரம் தூங்கிட்டேன் போல.
பசி வேற வயித்தக் கிள்ளுது. நான் என் சாப்பாட்டுத் தட்டை வாயில் கவ்விக்கிட்டு போயி வீட்டு வாசலில் தொப்புன்னு போட்டுட்டு அம்மாவக் கூப்பிட்டேன் அதாவது கொரச்சேன். எப்பவும் எனக்கு ஜெனிதான் சாப்பாடு வப்பா. இன்னிக்கு இன்னும் காணோம். வீட்டுக்குள்ள வேற ஒரே களேபரமா இருந்துச்சு. ஜெனிய ஸ்கூலுக்கு கெளப்பிக்கிட்டு இருக்காங்க போல இருக்கு.
ஹ்ம்ம்.. முன்னெல்லாம்-அதாவது நான் இங்க வந்த புதுசுல எல்லாம்-நானும் இந்த வீட்டுக்குள்ள தான் இருந்தேன். சும்மா புஸுபுஸுன்னு பஞ்சு மிட்டாய் மாதிரியே இருப்பேன்.ஜெனிக்கிட்ட தான் தூங்குவேன்.
அது அம்மாவுக்குப் புடிக்கல.ஏன்னா என் முடி அவளுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. அதனால எனக்கு முன் ரூம்ல இடம் தந்தாங்க. அங்கே ஒரெ வெக்க. ஃபேன் கூட இல்ல. அப்புறம் நானே அந்த வீட்டுல ஜிலு ஜிலுன்னு ஒரு இடத்த இல்ல ரெண்டு இடங்கள செலக்ட் பண்ணினேன். அது அந்த வீட்டு குளியலறையும் கழிப்பறையும். அங்க தான் எப்பவும் தண்ணிப்பசையோட ஜிலு ஜிலுன்னு இருக்கும். அங்க போயி படுத்துக்குவேன். என்ன சொகமா தூக்கம் வரும் தெரியுமா!.
இதுவும் அம்மாவுக்கு புடிக்கல. ஏன் ஜெனிக்கே புடிக்கல. என்ன கட்டிப் போட்டு பாத்தாங்க. ம்ஹும் நான் மாறல. அப்புறம் தான் எல்லாருமா சேந்து முடிவு செஞ்சு வீட்டுக்கு வெளியில எனக்குன்னு ஒரு வீடு செஞ்சு தந்தாங்க. இப்ப இந்த பெட்டிக்குள்ளதான் என் குடியிருப்பு. இருக்கட்டும் யானைக்கு ஒரு காலம் வந்தா இந்த ’ஜோஜோ’க்கு ஒரு காலம் வருமலா போயிடும்.
“அம்மா நான் உன்னும் ’ஜோஜோ’வுக்கு சாப்பாடு வக்கல. போய் வச்சுட்டு வரட்டுமா?”-ஜெனி.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நீ சாப்ட்டு சீக்கிரம் ஸ்கூலுக்குக் கெளம்பு. லேட் ஆகிடுச்சு பாரு. வேன் வந்துரும். இன்னிக்கு அவனுக்கு நான் சாப்பாடு வச்சுக்கிறேன்”-அம்மா.
கொஞ்ச நேரத்தில வேனும் வந்துருச்சு. அம்மா வெளிய வந்தாங்க. அவங்க ஒரு கையில ஜெனியப் புடிச்சுக்கிட்டு, அவ பைய தோள்ளயும் சாப்பாட்டுப் பைய ஒரு கைலயும் புடிச்சிருந்தாங்க. வாயில ஒரு நோட்டு வேற. இந்த கோலத்துல அம்மாவ பாத்த எனக்கு சிரிப்பு வந்துருச்சு. நான் தரையில விழுந்து பொரண்டு சிரிச்சேன். சிரிச்சு முடிஞ்சு பாத்தா அம்மா ஜெனிய வேன்ல ஏத்திவிட்டுட்டு வந்துட்டு இருந்தாங்க. நான் வேகமா போயி அவங்க கவனத்த என் பக்கம் திருப்ப என்னல்லாம் கோமாளித்தனம் பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணினேன். அவங்க பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கிட்ட பேசிக்கிட்டெ என்னய கவனிக்காம உள்ள போயிட்டாங்க.
கொஞ்ச நேரத்தில அம்மா கையில பர்ஸ்ஸோட வெளிய வந்தாங்க. எங்கயோ வெளிய கெளம்பிட்டாங்க போல. நான் மறுபடியும் குரச்சுக்கிட்டே அவங்க கால சுத்தி சுத்தி வந்தேன். என் முயற்சி பலிச்சிருச்சு. அவங்க கதவ பூட்டிக்கிட்டு இருக்கும்போதே “ஷ் மறந்துட்டேனே” ன்னு சொல்லிக்கிட்டே உள்ள போனாங்க.
”அப்பாடா இப்பவாவது என் நெனப்பு உங்களுக்கு வந்துச்சே”: நான் ஒரு சந்தோசத்துள்ளலோட குதிச்சிட்டு இருந்தேன். அம்மா வர சத்தம் கேட்டுச்சு. நான் ஓடிப்போயி பாத்தேன் வால ஆட்டிக்கிட்டே. அவங்க முகத்த ’டச் அப்’ பண்ணிக்கிட்டே வெளிய போய்ட்டாங்க. எனக்குப் புரிஞ்சிருச்சு. அவங்க ’மேக் அப்’ போடதான் மறந்துருக்காங்க. எப்பவும் வெளிய போகும்போது ’மேக் அப்’ போட்டுட்டு போறதுதான் வழக்கம்.
அவ்ளதான். அவங்க திரும்பி வரத்துக்கு கொறஞ்சது 2 மணி நேரம் ஆகும். அதுக்குள்ள நான் பசியில வயிறு எரிஞ்சு செத்துருவேன்.
நான் கோபத்தில கீழ பொரண்டு தரைய கீறினேன். கோபம் கொறஞ்சதும் அழுகை வந்துச்சு. பசி பொறுக்க முடியாம உக்காந்து அழுதுட்டு இருந்தேன்.
அப்போ பக்கத்து வீட்டு ஆளு எங்க வீட்ட கடந்து போனான். நான் அழறதப் பாத்து “ஏய் ஜோஜோ ஊளயிடாத”ன்னு அரட்டினாரு.
நான் “யோவ் போயா அந்தாண்ட. நானே பசி வெறியில இருக்கேன். வந்தேன் கடிச்சுக் கொதறிடுவேன்” னு சொல்லி கொரச்சுக்கிட்டே, அப்பதான் மொளச்ச என்னோட பல்ல கோரமா வெளிய காட்டி உறுமி அவன பயமுறுத்தினேன்.
அவன் என்ன பாத்து சிரிச்சுக்கிட்டே “ஸோ ஸ்வீட்”னு சொல்லிட்டான்.
எனக்கு வந்துச்சே கோவம் “யோவ் எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே கலாய்ப்ப. உன்ன…”அப்டின்னு சொல்லிக்கிட்டே அவன் பின்னாடி ஓடினேன். பத்தடி கூட ஓட முடியல.
நான் போயி நின்னு மூச்சு வாங்கின இடம் பக்கத்து ஆண்ட்டி வீடு. நின்னு திரும்பிப் பாத்தேன். அங்க லிசி-அது ஆண்ட்டி வளக்கற பூன-நல்லா படுத்துத் தூங்கிட்டு இருந்தா. நியாயமா அவளுக்கு லேசின்னு தான் பேரு வச்சுருக்கணும். எப்ப பாரு தின்னுட்டு தூங்குறதுதான் அவளோட அதிகபட்ச வேல.
அவ பக்கத்துல அவளோட சாப்பாட்டு தட்டு இருந்துச்சு. நான் மெதுவா போயி பாத்தேன். அடிவாரத்துல கொஞ்சமா பால் இருந்துச்சு. அரவமில்லாம குடிச்சுட்டு லிசி மாதிரியே அதாவது பூன மாதிரியே வெளிய வந்துட்டேன்.
அதுவும் யானப் பசிக்கு சோளப் பொறி கத தான். நான் திரும்பவும் எங்க வீட்டுக்கு வந்து என் எடத்துல படுத்துக்கிட்டேன். நேரம் ஆக ஆக பசி மறத்து பசி உணர்வே இல்லாம போயிடுச்சு.
’ஜோஜோ’ …… ’ஜோஜோ’
’ஆங்…அப்டித்தான். தட்டிக்குடுத்துக்கிட்டே இருங்க ரொம்ப நல்லா இருக்கு’
”ஏய் ஜோஜோ”
நான் திடுக்குன்னு எழுந்து சுத்தி சுத்தி பாத்தேன். அம்மாதான் என் எதிர்ல நின்னுருந்தாங்க. அவங்கதான் என்ன தட்டி எழுப்பியிருக்கணும். ’இப்ப இவங்களுக்கு என்னா வேணுமாம்’.
“சாரி ஜோஜோ நான் உன்ன மறந்தே போனேன். எப்பவும் ஜெனிதான் உனக்கு சாப்பாடு வப்பா இல்லயா. அதனாலதான் மறந்துட்டேன். . சாரி” இப்டி சொல்லிக்கிட்டே அம்மா எனக்கு சாப்பாடு வச்சாங்க. அது வழக்கத்துக்கு மாறா அதிகமாவே இருந்துச்சு.
’இந்த மனிசங்களே இப்டிதான் போல. புரிஞ்சுக்கவே முடியல’
…..

எழுதியவர் : மனோதினி (9-May-17, 7:37 pm)
பார்வை : 1143

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே