கண்ணீரே தண்ணீராய்oOoசொoசாந்தி
கண்ணீரே.. தண்ணீராய்..!
விழி மூடிக்கொண்ட வானத்தில்
துளிர்க்க வில்லை வியர்வையும்
நிர்வாணப்பட்ட நிலத்திற்கு
நிவாரணங்கள் இல்லை..!
வறட்சி ஆடை உருவியதால்
அவமானத்தால் வாய் பிளந்து
உயிரையும் விட்டது
விடம் அருந்தாமலேயே நிலம்..!
மக்கிப்போகாத பூமி
மழை தரும் உயிருக்காய்
மறுபிறவிக்கான காத்திருப்புகளில்..!
ஏரிக்கரையின் ஓரங்களில்
அழகு பார்த்துக்கொண்டிருந்த மரங்கள்
முகம் பார்த்து நாளாகிறது..!
ஆற்றின் குறுக்கே
படகு சவாரி செய்தவர்கள்
பாத சாரியாய் கடக்கிறார்கள்..!
சித்திரை வெயில் தாளாமல்
ஆற்றில் குளியலிடும் விடலைகள்
யாரையும் காணவில்லை
ஆற்றையும் சேர்த்தே...!
தாமரை குளத்து மீன்களை
நெடுநாட்களாக எறும்பு அரிக்கிறது
கொக்குகள் காத்திருந்து
கொத்திய மீன்களை
சிரமமின்றி உண்கிறது காகங்கள்..!
விடிந்தால்
வயலுக்கு நடை கட்டும் விவசாயி
போராட்டங்களில்..!
அவனெழுப்பிய கூக்குரல்
அவனுக்கே கேட்டிருக்காது..!
அரை வயிறுக்கு கஞ்சியின்றி
அரை அரையாகிப் போனது
அரைஞாண் கயிறு
அவன் பாதங்களை தொட்டு
விடை பெற்றும் கொண்டது ..!
உழவன் விழி வானத்தில்
எப்போதும் திரண்டிருக்கும்
கவலை மேகங்கள்
பொய்க்காமல் பொழிகிறது
கண்ணீரை...!
விளைச்சல் அமோகமாய்
கன்ன மேடுகளில் உப்பளங்கள்
விலைக்கு யார் வாங்குவது..?
வற்றாதிருக்கும்
விவசாயிகளின் கண்ணீரை
சுத்திகரிப்பு செய்யுங்கள்
குடிநீர் பிரச்சினையாவது
தீரட்டும்...!
#சொ.சாந்தி
(கடந்த வாரம் அருந்தமிழ் கலை இலக்கிய மன்றத்தில் வாசித்த கவிதை.
தலைப்பினை அளித்து வாசிக்கும் வாய்ப்பினை அளித்த திரு துருவன்
சார் அவர்களுக்கும் திரு கனல்மணி சார் அவர்களுக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்..!