வால்பாறை என்றொரு சிலி - கட்டுரை- கவிஜி

வால்பாறை என்றொரு சிலி - கட்டுரை- கவிஜி
****************************************************************

மனித கால் தடங்களே படாத இடங்களில் இருளின் வாசம் இன்னும் பிறக்காத குழந்தையின் சுவாசத்தைக் கொண்டிருக்கிறது. எனக்கு தெரிந்து ஒரு முறை கடவுள் வந்து விட்டு போனதாக கூட ஞாபகம்..

அருவி கொட்டும்
அடிவானம் முட்டும்
ஆழங்கள் கிட்டும்
பெருமழை தட்டும்.....

இந்தியாவில் இரண்டே இடங்களில் இருக்கும் சிங்கவால் குரங்குகள் இருக்கும் இரண்டாவது இடம் அல்லது முதல் இடம். அந்தம் கொண்ட ஆதியில் ஆதி கொண்ட அந்தமும் இருப்பது போல.

40 கொண்டை ஊசி வளைவுகள்.....50 க்கும் மேற்பட்ட சிறு வளைவுகள் தாண்டி மெல்ல ஊர்ந்து நிமிர்கையில்... "கார்வர் மார்ஷ்" காட்டிய சொர்க்கம் கண்முன்னே விரியும். உங்கள் நிறம் எதுவோ அந்த நிறத்தில் மின்னும் இந்த "வால்பாறை"..... வாழும் போதே சொர்க்கம் தரும். அங்கு வாழ்ந்தவர்களின் கடைசி ஆசை அந்த மண்ணுக்கே உரமாக வேண்டும் என்பதே. அத்தனை நிம்மதி. அத்தனையும் சன்னதி.

எப்போதும் மிதமான வானிலை. மழையும் மலையும் சூழ... லத்தீன் அமெரிக்க நாடான "சிலி"யின் தோற்றத்தை ஒத்த ஒரு மலைப் பிரதேசம். கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊர்.... இன்னும் பெரும்பாலான சுற்றுலா விரும்பிகளின் கண்களில் அவ்வளவாக படவில்லை என்பது ஆனந்த கூத்து எனக்கு. நான் இன்னமும் தனியனாய் வால்பாறை புற பகுதி சாலைகளில் ஒற்றையாக நடக்கும் காட்டு யானையின் தும்பிக்கையில் தும்பிகளின் நிழல் பற்றி அலைய யாரும் அங்கே வராமல் இருக்கவே வேண்டுகிறேன். பொள்ளாச்சியில் இருந்து 64 கிலோ மீட்டர்கள். "ஆழியார்" அணை தாண்டி "குரங்கு" அருவி தாண்டி... மலையை குடைந்து போட்ட கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி உச்சியை அடையும் போது "அட்டகட்டி" உங்களை வரவேற்கும். அதை தொடர்ந்து... "புலி பள்ளத்தாக்கு" தாண்டி.. "வாட்டர்பால்" கடந்து "ரொட்டிக்கடை" கடந்து கீழே இறங்க இறங்க தலை கிறு கிறுக்கும். தனிமை மொறு மொறுக்கும். இருந்தும் உள்ளே பரபரக்கும்.

ஆங்கிலேயன் காலத்தில் "கார்வர் மார்ஷ்" என்ற அறிஞன் ஆனைமலை காடுகளுக்குள் ஓர் ஊர் இருப்பதை கண்டு பிடித்தார். அந்த ஊர் யாருமற்ற புல்வெளியாக.....மரங்களின் அற்புத வனமாக மலை சரிவின் ஆத்மார்த்தமாக இருந்தது. மலையை வெட்டி வெட்டி சாலை போட்டார். வளைந்து வளைந்து மேலே சென்றார். காடு நகர்ந்தது. கண்கள் நிறைந்தது. காபியும் தேயிலையும்......பனித்துளிகள் சில்லிட.. புலிகளும் யானைகளும்.....பளிங்கு பாறைகள் துள்ளிட.... நதிகளும்.... ஓடைகளும்..... வான் நிறத்தில் வெள்ளியிட........ஆகா......அற்புத வானம் அவர்கள் மேல் விரிந்தது. அற்புத வனம் பக்கவாட்டில் பிரிந்தது. இந்த மலைப்பாதை உருவாக்கும் கால கட்டத்தில் ஏகப்பட்ட உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளது என்கிறது வாய்வழி வரலாறு.

பசிக்கும் பஞ்சத்துக்கும் மாட்டிக் கொண்ட மக்கள் பழனியிலிருந்து...... திருநெல்வேலியிருந்து.....கோவையிலிருந்து.... ஈரோட்டிலிருந்து......மைசூரிலிருந்து.....தர்மபுரியிலிருந்து.......இலங்கையிலிருந்து.....என்று அங்கே குடி புகுந்தார்கள். கருங்கற்களால் ஆன லைன் வீடுகள் கட்டப்பட்டன. அது "சிலி"யின் வீடுகளை ஒத்திருந்தது. சிலியை போல இருக்கும் இந்த இடத்துக்கு சிலியின் முக்கியமான ஊரான "வால்பாறைஸோ" என்ற பெயரையே இங்கும் வைத்தார்கள். காலப்போக்கில் வால்பாறைஸோ "வால்பாறை"யாக மாறி இருக்கிறது.

விறகு.. சுத்தமான மழை நீர் மலை பொதிந்து கொண்டு அவ்வப்போது சொட்டும் சிறு ஓடைகள்.... கால்வாய்கள்....வீடு... என்று எல்லாம் இலவசமாக கிடைக்க......அவர்கள் வேலை செய்யத் துவங்கினார்கள். காடு தேயிலையாகவும்.. காபியாகவும்... மாறியது. தேயிலை வளர்வதற்கான சரிவான பரப்புகள் அதிகம் உள்ள இடங்கள் வால்பாறை முழுக்க நிறைந்து இருக்கிறது. தேயிலைக்கு நீர் தேங்க கூடாது. ஆனால் அதே சமயம் தொடர்ந்து நீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அங்கு தான் எப்போதும் பேய் மழை பெய்யுமே. பெய்யும் மழையெல்லாம் பச்சை செய்யும் மந்திரம் கொண்ட பெருவெடிப்பின் மறு நிகழ்வென இப்போது உணருகிறேன்.

அது அங்கே நிகழ்ந்தது. வால்பாறை வளமானது. வாழத் தகுதியானது. ஊர் நிறைந்தது. அடுத்தடுத்து ஊர் பிறந்தது. மலையும் மலை சார்ந்த வாழ்வும் வசீகரித்தது. எல்லா வீடுகளும் கூட்டு குடும்பம் போல கதைத்தன. எவர் வீட்டு கதவும் எப்போதும் திறக்கும் கடவுளின் ஆசீர்வாதங்களால் தட்டவும் திறக்கவும் காத்திருந்தன. ஆனால் அங்கே தயாரிக்கப்படும் உயர் தர தேயிலையையும் காபியையும் அந்த மக்கள் இன்று வரை பருகியதே இல்லை என்பது தான் வரலாற்று பிழை. வரலாறு பிழைத்த விதை. காலம் கடந்து.... இப்போது... சம்பள பிரச்சினையில் வால்பாறை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த அற்புத வானத்திலிருந்து கீழே இறங்கி கோவையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வாழக்கை தந்த சோகமா வாழ்வதில் பெற்ற தாகமா என்று அந்த மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

மிக வலுவான செய்தி ஒன்று. தேயிலை செடி இல்லை. மரம். ஐந்து வருடத்துக்கு ஒரு முறை கவாத்து என்று சொல்லப்படும் இலையின் தலையை ஒரே சீராக செதுக்கி விடும் வேலை நடைபெறுகிறது.

"சின்கோனா" என்றொரு ஊர் இருக்கிறது. அதுதான்.. வால்பாறையில் சிரபுஞ்சி. தொடர் மழை.. அடர் வனம். படர் பனி. சுடர் ஞாபகம்.

"கவர்க்கல்" எப்போதும் பனி படரும் பகுதி. எதிரே வரும் ஆட்கள் கூட தெரியாத அளவுக்கு பனி படரும் உயர்ந்த பகுதி. மேகத்தில் நடக்கும் தேவதூதர்கள் ஆகும் தருணம் கவர்க்கல்லை கடக்கும் தருணம். மெல்லிய பசும் வெண்மையை.....காரிருள் கும்மிருட்டை... மரணத்தின் செவ்வக தன்மையை காணும் இடமெல்லாம் காட்டும் கவர்க்கல்லில் இருந்துதான் கையை நீட்டி.. "இதோ இந்த பக்கம் ஓர் ஊர் இருக்கிறது" என்று வழி காட்டிய "கார்வர் மார்ஷ்" அவர்களுக்கு சிலை இருக்கிறது.

இன்றும் அந்த பனிக்குள் அஞ்சாத ஒரு சிங்கமென வெறித்துக் கொண்டு தீரா தாகத்தோடு "கார்வர் மார்ஷ்" ன் சிலை பார்க்கும் காட்சி மெய் சிலிர்க்கும் மெல்லிய நிகழ்வு. வல்லிய விளைவு.

வால்பாறையிலிருந்து சாலக்குடிக்கு ஒரு காட்டு பாதை "மளுக்கப்பாறை" வழியாக செல்வதை பெரும்பாலோர் அறிந்திருக்க முடியாது. அது ஆக சிறந்த பயணம் என்பதை உணர்ந்தோர்களில் நானும் ஒருவன். தமிழ்நாடு எல்லை சேக்கல் முடி என்ற இடத்தோடு முடிந்து அதன் பிறகு பரந்த வனம் விரியத் தொடங்குகிறது.

சேக்கல் முடி, நல்ல முடி, குரங்கு முடி, தோணிமுடி, தாய்முடி, கெஜமுடி, முத்துமுடி, இஞ்சிப்பாறை, மளுக்கப்பாறை, வரட்டுப்பாறை, வெள்ளமலை, பச்சைமலை, வாகமலை, அக்காமாலை, கருமலை, காஞ்சமலை, ஊசிமலை, தலனார், நல்ல காத்து, சோலையாறு, உருளிக்கல், வில்லோனி, காப்பிக்காடு, சின்கோனா, சிறுகுன்றா, முடீஸ், கல்யாண பந்தல், பன்னிமேடு, முருகாலி, ஈட்டியார், சின்னக்கல்லார், பெரியகல்லார், சவரங்காடு, மாணிக்கா, ஸ்டான் மோர், மானாம்பள்ளி என வித்தியாசமான பெயர்களில் வால்பாறையை சுற்றியுள்ள ஊர்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் முதல் நிறம் பச்சை. பிறகு அதனதன் ஆழத்திலிருந்து வந்து விழும் சிறுஓடையென ஒரு நிறம்.

இன்னும் இன்னும் இருக்கும் ஊர்கள் எல்லாவற்றுக்கும் ஞாயிறில் வால்பாறை சந்தை ஒன்றுதான். விடுமுறை தினம் என்பதாலும் அத்தனை ஊர் மக்களும் வால்பாறைக்கு வந்து காய்கறிகள், வீட்டு சாமான்கள் என்று தேவைகளை நிரப்பிக் கொண்டு வீடு திரும்புவது திருவிழாவுக்கு ஒப்பானது. ஆனால் பேருந்துகளில் ஏறி அமரும் தருணம் என்பது கொடியதிலும் மிகக் கொடியது. ஒரே வாசல் இருக்கும் பேருந்துகளில் அடித்து பிடித்து ஏறி இடம் பிடிக்கும் செயலைப் பார்க்கும் போது பகீரென உள்ளுக்குள் ஏதோ வெடிக்கும். சன்னல் வழியாக குழந்தையை தூக்கி போட்டு சீட்டில் இடம் பிடிக்கும் வீர சாகசங்கள் நிறைந்தது அந்த வளைவுகளின் பயணம்.

எங்கு எப்படியோ.... வால்பாறையை சுற்றியுள்ள ஊர்களில் பொங்கல் படு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கரகாட்டம் என்றொரு கலையை இன்னமும் மறக்காமல் வருடாவருடம் கரகாட்ட கலைஞர்களை அழைத்து வந்து ஆட வைத்து மகிழும் அற்புத ரசனைவாதிகள் வால்பாறை மக்கள். கரகாட்டக்காரர்கள் ஆடும் பொழுது ஒரு வருடமும் ஆடாமல் உள்ளுக்குள் இருந்த கலை பீறிட்டு வெளிவருவதைக் காண கண்கள் மனதிலும் முளைக்கும். மைதானத்தில் அவர்கள் ஆட,.... சுற்றி நின்று ஊர் பெருசுகள் இளசுகள் என்று இவர்கள் ஆட, ஒரு வருட உழைப்பின் களைப்பு மெல்ல மெல்ல உற்சாகமாக மாறுவதை சில் அவுட் காட்சியில் கண்டிருக்கிறேன்.

சோலையாறு அணை, காடம்பாறை அணை, நீரார் அணை என்று வால்பாறையை சுற்றியுள்ள அணைகள் பார்க்க பார்க்க பரவச நிலைக்குள் நீந்தும் சிறு மீன்களின் ஊஞ்சல் ஞாபகம். எத்தனை விதமான மரங்கள்....பூக்கள்..... விலங்குகள்.... ஓடைகள்...அருவிகள் என்று ஒரு சொர்க்கத்துள் நுழைந்த கனவு மாதிரியே இருக்கிறது வால்பாறை. மானாம்பள்ளி வனச்சரகம் ஒரு வித மாய தத்துவத்தை நம் முன்னே விரிக்கிறது. அந்த மலைக்குள் இறங்கி மலை ஏறினால் "பொள்ளாச்சி"க்கு வந்து விடும் குறுக்கு பாதைகள்.....குதிரைப்பாதைகள் இன்னும் ஆங்கில திகில் பட இடைவேளை காட்சி போல மிரட்டிக் கொண்டே இருக்கின்றன. அக்காமாலை தாண்டி இறங்கினால் "மூணாறு" வந்து விடும் பூகோள அமைப்பு பிரமிப்பு .

ஆசியாவில் இரண்டாவது உயரமான அணை என்ற பெருமை இங்கிருக்கும் "சோலையாறு அணை"க்கு இருக்கிறது என்பது கண்கள் விரியும் கழுகின் சாமர்த்திய ஆச்சரியம். வால்பாறையை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் என்பது தேயிலையும் அது சார்ந்த வேலைகளும் தான். இன்றும் குறைந்த கூலி வாங்கிக் கொண்டுதான் வாழ்வை நகர்த்துகிறார்கள். ஆனாலும் அங்கே வாகன இரைச்சலும்.... மாசு கொண்ட காற்றும் நீரும் அற்ற சுத்தமான சுவாசங்கள்....தாகங்கள் நிறைந்து இருப்பது அத்தனை மகிழ்வைக் கொடுக்கிறது. அதிகாலை வாசலில் வந்து சூழ்ந்திருக்கும் பனிப் பொழிவுகளுக்குள் நுழையும் தருணங்கள் வாழ்வின் மிகச் சிறந்த தருணமாக கொள்ளலாம். மழை விரட்ட ஓடி விளையாடும் சிறு பிள்ளைகளின் ஞாபகத்தில் காடு விரிந்து கொண்டே இருக்கிறது.

அதிக காதல் திருமணங்கள் நடக்கும் ஊர். சாதி மதங்கள் அத்தனை பாடு படுத்துவதில்லை. எவர் வீட்டுக்குள்ளும் அக்கா, அண்ணே, தம்பி, மாமா, மட்சா, நண்பா என்று முறை வைத்து கொண்டு நுழையும் அன்பை காணலாம். "அக்கா கொஞ்சம் கொழம்பு குடேன்" என்றபடியே தட்டில் சோற்றை போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டு வாசலில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கொள்ளும் அழகியல் அங்கே ஏராளம்.

கில்லி விளையாடும்..... பச்சை குதிரை தாண்டும்...ஒளிந்து விளையாடும் மறைவுகள்....சாத் பூட் த்ரீ விளையாட்டு.......புதையல் தேடும் விளையாட்டு என்று இன்றைய தலைமுறை மறந்து போன பல விளையாட்டுகள்.... கிரிக்கெட்டை தாண்டி இன்னமும் அங்கே இருக்கின்றன.. அதுவும் கால் பந்தின் தீவிர ரசிக கூட்டமும் அங்கே இருக்கின்றது. இன்னமும் சொல்ல போனால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கால் பந்து விளையாட்டு வீரர் இருக்கிறார் என்றால் மிகை இல்லை. வீட்டுக்கு முன்னால் இருக்கும் தோட்டத்தில் ரோஜா பூத்தாலும் சரி.. மல்லிகை குலுங்கினாலும் சரி......மாம்பழம்.. கொய்யா, பலா பழம் என்று எதுவும் பகிர்ந்து கொள்ளப்படும்.

இவர்கள் வால்பாறையின் பழங்குடிகள் அல்ல. எல்லாருமே வந்தேறிகள் தான். இங்கே பழங்குடிகள் என்று யாருமே இல்லை. ஆனால் காடர்கள் இனம் அங்கே உண்டு. செட்டில்மென்ட் ஏரியா என்று அழைக்கப்படும் காடர்கள் இனம் அங்கே இருக்கின்றது. இவர்கள் காலப்போக்கில் காட்டுக்குள் தங்களை தகவமைத்துக் கொண்டவர்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பூகோளம் கதைத்த படி இந்த காட்டில் மனிதர்கள் காட்டுக்குள் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கு வந்த எந்த ஒரு மனிதமும் இந்த வாழ்வை.....இடத்தை விட்டு தன்னை பிரிக்க ஒரு போதும் முனைவதில்லை. அத்தனை இயல்பாய் இயற்கையோடு இயற்கையாக தங்களை கோர்த்துக் கொள்ளும் அழகு ஆனந்த கூப்பாடு செய்கிறது. உடல் நோயாளிகள் மிக குறைவுள்ள ஊர் இது. எப்போதும் உள்ளம் பிரகாசமாக இருக்கும் வெயிலும் மழையும் குளிரும் பனியும்.. ஊரும் உறவும்.. உண்மையும் அகமும் நிறைந்து இருக்கும் ஊரில் வாத்துக்கள்.. கோழிகள்.. மயில்கள்....காகம்....புறாக்கள், மாடுகள், கரடிகள், புலிகள், சிறுத்தைகள்,கேளையாடுகள், மிளாக்கள், முள்ளம்பன்றிகள்,யானைகள், குரங்குகள் என்று நிரம்பி செழிக்கும் ஆறுகளும்... அணைகளும்.... வாழ்வை ததும்ப ததும்ப தரும் அற்புத வளைவுகளினிமித்தம் செய்யப் பட்ட ஆலாபனை.

பிரியாணி வீதி நிறைக்கும். கேக் கோவில் மணக்கும். கொழுக்கட்டை ஊர் முழுக்கும் . எம்மதமும் சம்மதமென்று கோட்பாடுகள் அதுவென்று தெரியாமலே பூக்கள் பூக்கும். இந்தியாவில் இலையுதிர் காலங்கள் இல்லையென்று யாரோ சொன்ன ஞாபகம். ஆனால் இங்கு இலையுதிர் காலங்கள் உண்டு. இலை உதிர்ந்த சூட மரங்கள்....திரும்பும் பக்கமெல்லாம் ஆன்மா உலரும். தமிழ் சினிமாவின் வரமென்று வால்பாறையை கூறலாம். அத்தனை சினிமாக்கள் வால்பாறையை சுற்றி எடுக்கப்பட்டிருக்கின்றன. "மூங்கில் காடுகளே" பாட்டில் கதை நாயகன் நீருக்கு நடுவே இருக்கும் மரக் கிளையை பற்றி இழுத்து குலுக்கும் காட்சி ஒரு சோறு பதம்.

நிஜமாகவே தொடுவானம் தொட்டு விடும் தூரம் தான் இங்கு. தொட்ட ஞாபகம்....தொடாமலும் ஞாபகம் வந்து தொலைக்கும் காலை பனியின் அதிர்வுகள் நிரம்பித் தவிக்கும் குறும்பு கனவுகள் சற்று அதிகம். ஒவ்வொரு வளைவுக்கு பின்னும் ஒரு குளிர் மெல்ல படர்ந்து வரும். ஒவ்வொரு மேட்டுக்கு பின்னும் ஒரு புலி மெல்ல பதுங்கி நிற்கும். செந்நாய் கூட்டத்தின் ஒளிமயம்..... இருளின் ஸ்வப்ன கூடுகள் அலையும் அதிசயம். திருமணத்துக்கு கூடும் கூட்டம் நம்பிக்கை. மரணத்துக்கு கூடும் கூட்டம் ஆறுதல். மாறி மாறி உதவிக்கொள்ளும் உணர்வுகள் மானுடம்.தேர் இழுத்தாலும் ஊர் கூடி நிற்கும். வேர் பிடித்தாலும் ஊர் கூடி நிற்கும். நிஜம் தேடும் நித்திய உலகத்தில்.... சாபங்கள் குறைந்த வரமாக நிறைந்து வழியும் வால்பாறைக்குள் ஒரு காட்டு முயலென எட்டிப்பார்த்த என் அனுபவங்களை அருவிக்குள் நகரும் சிறு பூமியின் சித்திரச் சோலையென விரிக்கிறேன்.

பிடித்துப் போங்கள். யாருக்கு தெரியும்.... வால்பாறை காட்டுக்குள் அதோ பறக்கும் பட்டாம்பூச்சி நீங்களாகவும் இருக்கலாம்.

கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-May-17, 9:14 pm)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 445

சிறந்த கட்டுரைகள்

மேலே