அகநானூறு காதல் பாடல் 4
பூவுக்குள் உறங்கும் ஆண்-பெண் வண்டுகள் தேரின் மணியொலி கேட்டு அஞ்சாவண்ணம் தேர்மணியின் நாக்கைக் கட்டிவைத்துக்கொண்டுள்ள தேரில் அவன் (தலைவன்) வருகிறான், என்கிறாள் தோழி, தலைவியிடம்.
[அ]
முல்லை அரும்பு விட்டிருக்கிறது. இல்லம், கொன்றை ஆகிய மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. முருக்கியிருக்கும் இரும்பு போன்ற முருக்குக் கொம்புகளை உடைய இரலைமான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. உலகம் புலம்புவதைக் கைவிட்டு மகிழ்ச்சியில் திளைக்கிறது. இப்படியெல்லாம் நிகழும்படி மேகத் தொகுதி பெருமழை பொழிந்து காடெல்லாம் கருமை நிறத்துடன் கவின் (அழகு) பெற்றுத் திகழ்கிறது.
[ஆ]
அவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர் போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான்.
அவன் தேரில் வருகிறான். குரங்கின் தலைமயிர் போல நிமிர்ந்து வளைந்த பிடரி மயிருடன் கூடிய குதிரை பூட்டிய வண்டியில் வருகிறான். தேரில் கட்டியிருக்கும் மணியின் நாக்கு ஆடி மணியோசை எழுப்பாதபடி மணியின் நாக்கை இழுத்துக் கட்டியிருக்கிறான். வாங்கி வளைந்து அரி அரியாகம் பூத்து உதிரும் நிலையில் இருக்கும் பொங்கர்ப் பூவில் தன் துணையாடு இன்பமாக உறங்கும் தேன் உண்ணும் வண்டுகள் தேர்மணியின் ஒலியைக் கேட்டு அஞ்சி ஓடாமல் இருக்க அவ்வாறு அவன் மணிநாக்கைக் கட்டிவைத்திருக்கிறான். அப்படிக் கட்டிவைக்கும் வாய்ப்பு இருக்கும் சிறந்த தேர் அது.
[இ]
அவள் (தலைவி) தெரிந்தெடுத்த வளையல் அணிந்தவள். அரிவை பருவத்தள். அவள் காந்தள் பூவைப்போல் மணக்கும் நறுமண மேனியை உடையவள். எப்போதும் விழாக்கோலமாக விளங்கும் உறையூருக்குக் கிழக்கில் உள்ள உயர்ந்த பெரிய குன்றத்தில் மலர்ந்திருக்கும் காந்தள் பூப் போன்ற மணம் அந்த மேனிமணம்.
பாடல் சொல்-பிரிப்புப் பதிவு
4. முல்லை
[அ]
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, 5
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
[ஆ]
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி,
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன்,
[இ]
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் 15
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே.
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது.
குறுங்குடி மருதனார் பாடல்