வாகனத்தில் வேகம் வாழ்வில் துன்பம்

வாகனத்தில் வேகம் வாழ்வில் துன்பம்!
====================================

வானில் எழுமேவு கணைபோல் வரையறையிலா
—-வாகன மெலாம் சாலையிலே பறக்குதங்கே
அவசரமாய்ப் போட்ட தார்ச்சாலை வழுக்கியதால்
—அதிவேகமாய்க் கூட்டுதிங்கே விபத்துக் கணக்கை!

வாகன வேகமதைச் சாலையில் காட்டாதேயுன்
—விவேக புத்தியைச் செய்யும் செயலில் காட்டுவாய்!
ஒடிந்தமூட்டும் உடலிலி லழியாத் தழும்புடனே
—-நொண்டிவாழும் வாழ்வு தேவைதானா சொல்லு!

வீதிகளில் காட்டும் வாகன வேகமதுவுன்
—-வாழ்வில் இருளைத் தந்து விடுமிதை
அறியாமல் செல்கின்ற வேகம் ஆபத்தாகும்
—-அறியவைக்க முயற்சி செய்தும் பலனில்லை

கணவனை இழந்த காரிகைகள் தன்னருமைக்
—-குழந்தை இழந்த தாய்மார்கள் பலரென
உயிரில்லா வாகன மொன்றால் முடியுமொரு
—-உன்னுயிரை யரை நொடியில் பறித்துவிட!

வீதிகளில் விதிகளின் மேல் வழிநடந்தால்
—விதி முடிந்ததென்று புகலுவதை விடுக்கலாம்
ஆடி அடங்கிய அருமுடம்பை எரித்து
—-அரை நொடியில் சாம்பலாவதைத் தவிர்க்கலாம்!

சுழலுவதே சக்கரத்தின் செயலானால்…வாழ்க்கைச்
—-சுழற்சியிலோயாமல் உழலுவதும் மோர் நியதியன்றோ?
பங்கமிலாப் பெற்றபெரு வாழ்வு நிலைபெறவுன்
—-அங்கமதில் குறையிலா வாழ்வு வேண்டும்!

உனக்கென்று உதித்ததைத் பறிக்க இங்கு
—-உலகில் யாருக்கும் உரிமையில்லை யென்பதை
உணர…உன்வாழ்வில் வேகமே வேண்டாமென
—-நிதானமாய் வாழ்வில் நின்று நட!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (5-Jun-17, 1:09 pm)
பார்வை : 175

மேலே