மீண்டும் வருவாயா காந்தி?
காந்தி!
எம் தேசத்தின்
வரைபடத்தை
தியாகத்தில் எழுதியவனே
அன்னியர் பிடியில் இருந்து
அன்னை தேசத்தை
அஹிம்சையால்
பெற்றுத்தந்த பிதா மகனே
வந்து பார்
உன் தேசத்தின்
அவலத்தை!
பணத்தை நீ
என்றுமே நேசித்ததில்லை
உனக்குப் பின் வந்தவர்களோ
அந்தப் பணத்திலே உன்னை
பதித்து
அமோகமாய் நடத்துகிறார்கள்
அரசியல் வியாபாரம்...
நள்ளிரவில் நீ வாங்கித்தந்த
சுதந்திரம்
இன்று பட்டப் பகலிலே
பறிபோய் கொண்டிருக்கிறது...
பூங்காவாய் நீ
விட்டு சென்ற தேசம்
தினமும்
வெடிகுண்டு சப்தத்தில்
விழித்தெழுகிறது....
ஆன்மீகமாய் நீ
நடத்திய அரசியல்
இன்று
சாதி சாக்கடையில்
சறுக்கி விழுந்து
நாற்றமடிக்கிறது..
கைத்தடி ஊன்றி
நடந்தவனே
அவசரப்பட்டு
அப்படியே வந்துவிடாதே..
கைத்துப்பாக்கியோடு
வந்தால் தான்
நீ
பத்திரமாய் நடக்க முடியும்..
சொந்த நாட்டில்
திருடியதை எல்லாம்
சுவிசர்லாந்து வங்கியில்
வைத்து விட்டு
தந்திரமாய் திட்டமிடுகிறார்கள்
வறுமை ஒழிப்பு திட்டத்தை..
மீண்டும் வருவாயா
காந்தி!
எம் தேசத்தை
சுத்தப்படுத்த
உன்
புண்ணிய கைகளால் தான் முடியும்.