நீலக் குழந்தை

வழக்கத்திற்கு மாறாக நாராயணன் கோவிலுப்போன தாத்தாவும் பாட்டியும் இன்று தாமதமாக வந்திருந்தனர்..

பயண ஆயத்தங்கள் யாவும் முடிந்து வண்டிக்கு காத்துக் கொண்டிருந்தது வீடு.
புடவைத் தலைப்பால் நெற்றி வியர்வையை ஒற்றிக் கொண்டு வெளியில் வெயிலில் காய்ந்து கொண்டிருந்த மாங்காய் வற்றலை அள்ளி அவசரமாக எடுத்து கொல்லைப்புற அறையில் போட்டுக் கொண்டே " அம்முச்சி" எனக் குரல் கொடுத்தாள் அம்மா பார்வதம் .
அம்முச்சி அவளின் ஐந்தாவது பெண் பிள்ளை ..போன வாரம் பிறந்த அம்மூச்சியின் செல்ல ஆட்டுக்கு குட்டி அம்முச்சிக்கு முன்னதாகவே துள்ளி வந்து பார்வதத்தின் காலை முட்டிக்கு கொள்ள எந்தச் சலனமும் இல்லாமல் அதன் பின்னால் வந்து அருகில் நின்றாள் அம்முச்சி .

"பாட்டியிடம் அடம் பிடிக்காமல் சாப்பிடு மருந்து வாங்கிக் குடித்துக் கொள்
விரைவில் குணமாகினால் தான் அடுத்தமுறை விடுமுறைக்கு எங்களோட வரலாம்" என்றாள் பார்வதம்
".ம் ...ம்...இப்படி எத்தனை தடவைதான் பொய் சொல்லுவாய் போ" என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் அம்முச்சி.
"உனக்கு விடுமுறையில் இருந்து வரும் போது என்ன வாங்கிக் கொண்டுவர வேணும்" கேட்டுக் கொண்டே பாட்டி கொடுத்த கோயில் திருநீற்றை அம்முச்சி நெற்றியில் பூசி விட்டாள் பார்வதம்.
"எனக்கு ஒண்டும் வேண்டாம் என்னை ஏமாத்தவும் வேண்டாம் போ" என்று கண்ணில் முட்டிய நீரை அடக்கிக் கொண்டே கையில் இருந்த முள் முருக்கம் பூ இதழ்களை பிய்த்து தரையில் போட்டுக் கொண்டிருந்தாள் அம்முச்சி..

வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம்.. அக்காமார்கள் நால்வரும் ஓடி வந்து அவளைக் கட்டியணைத்து விட்டு பெட்டிகளோடு வண்டியில் ஏறுவதை கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளுக்காக அன்று வாங்கி வந்திருந்த கரடி பொம்மையை கையில் திணித்து அம்முச்சியை உச்சி முகர்ந்து விட்டு "தாத்தா பாட்டி பேச்சுக் கேட்டு சாப்பிட்டு மருந்து ஒழுங்கா குடிச்சு நல்ல பிள்ளையா இரும்மா நாலு நாளில் நாங்கள் வந்திடுவோம்" என்று கூறிக்கொண்டு காரில் முன்னருக்கையில் அமர்ந்து கொண்டார் அப்பா ஆசீர்வாதம்.தாத்தா பாட்டியோடு ஏதோ சொல்லி விட்டு அவசரமாய் வந்து அம்மாவும் வந்து ஏறிக்கொண்டாள். தெரு முனை வரை வண்டி சென்று முடியும் வரை அவர்கள் கையசைப்பைப் பார்க்கப் பிடிக்காதவளாய் திண்ணையில் வந்து ஆட்டுக்கு குட்டியோடு உட்கார்ந்து கொண்டாள் அம்முச்சி ...

குட்டியைக் காணாமல் கத்திக் கொண்டிருந்த தாயாட்டின் சத்தத்தில் இயல்பு நிலைக்கு வந்தவள்ஆட்டுக் குட்டியைத் தாயிடம் சேர்த்து விட்டு காய் கால் முகம் கழுவி விட்டு திண்ணையில் சாப்பாட்டுக்கு போப்பையுடன் தனக்காக காத்துக் கொண்டிருந்த பாட்டியருகில் உட்கார்ந்தாள்.அம்முச்சி.

அம்முச்சிக்கு ஏழு வயதுதான் ஆனால் வயதை மீறிய ஞானம் ..எல்லோரிடமும் பரிவாக இருப்பாள் அவளுக்கு முன் பிறந்த நால்வரும் பெண் பிள்ளைகள் ஐந்தாவது குழந்தையாவது ஆண்பிள்ளையாக வரவேண்டும் என்று பார்வதமும் ஆசீர்வாதமும் ஏறி இறங்காத கோயில் குளம் இல்லை.. இடையில் யாரோ ஒரு சோதிடர் இந்தப் பிள்ளையும் பெண் பிள்ளையாகத்தான் பிறக்கும் என்று கூற வெறுப்பும் வேதனையும் மேலிட வயிற்றில் குழந்தையோடு கவலையில் சரியாக தன்னைக் கவனிக்காது சாப்பிடாது இருந்து விட்டாள் பார்வதம்.

சோதிடர் கூறியவாறே பிறந்தது பெண் குழந்தை. பிறந்த குழந்தைக்கு இதயத் துடிப்பு அதிகம் என்று மருத்துவர்கள் சோதித்துக் கூற அதிர்ந்தே போய்விட்டனர் ஆசீர்வாதமும் பார்வதமும்.. இரண்டு மூன்று வருடங்களாக மருத்துவ மனையும் வீடும் என்று அலைந்தவர்கள் ஒரு சிறு அறுவைச் சிகிச்சையின் பின் குழந்தை சிறிது குணமடைய ஓரளவு நிம்மதியடைந்தார்கள்.இருந்தாலும் குழந்தை வயதுக்குரிய வளர்ச்சி இல்லாமல் மெலிந்த தோற்றத்துடன் இருந்தாள்.

இப்போது பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டாள் இருந்தாலும் மருத்துவக்ள்காரணங்களுக்காக பயணங்களில் அவளைத் தவிர்த்தார்கள் குழந்தைகளோடு கண்டபடி விளையாட விடுவதில்லை தேர்ந்த உணவு வகைகளை மட்டுமே உண்ணக் கொடுத்தார்கள் ..தனது சகோதரிகளை விட தான் மட்டும் வித்தியாசமாக கவனிக்கப் படுவதை அம்முச்சி அறவே வெறுத்தாள். தனக்கு எதையோ தன் பெற்றோர்கள் மறைப்பதாக உணர்ந்து கொண்டாள். சில வாரங்களுக்கு முன்
பாடசாலை மெய் வல்லுநர் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்பியவளை வகுப்பாசிரியர் முடியாது என்று கூற அழுது கொண்டு தலைமை ஆசிரியர் வரை சென்று விட்டாள்.. அப்பா அம்மா அனுமதி தந்தால் மட்டும் சேர்த்துக் கொள்வோம் என்று அவரும் மறுத்து விட்டார்..

கவலையோடு மைதானத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்தவள் கவனத்தை தன்னருகே நின்று பேசிக் கொண்டிருந்த ஆசிரியைகளின் பேச்சு திருப்பியது அடிக்கடி தன்னைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தவர்களின் உரையாடலில் நீலக்குழந்தை என்ற வார்த்தை மட்டும் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. எப்படியாவது இத பாட்டியிடம் கேட்டுது திரிந்து கொள்ள முடிவெடுத்தாள் ..

நாவல் மரத்தின் மேலால் நிலா எழுந்துவந்து கொண்டிருந்தது ..ஏழு மணிக்கு கலவை மருந்து குடிக்க வேணும் அதற்கு முன் ஒரு வாயாவது சாப்பிடவேணும்
என்று கூறிக் கொண்டே சாதத்தை ஊட்டி விட தொடங்கினாள் பாட்டி சாப்பிட ஆரம்பிக்கு முன்பே கதை சொல்லு பாட்டி என்று அடம் பிடிக்கத் தொடங்குபவள் இன்று மட்டும் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டாள். பாடசாலையில் நடந்த விடயம் தன்னைப் போட்டியில் சேர்க்காதது யாவும் சொல்லி அழுதாள்.பாட்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
நீலக் குழந்தை சமாச்சராம் இவளுக்கு எப்படித் தெரிய வந்தது இருந்தாலும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு "அம்முச்சி நீ அம்மா வயித்துல இருந்த போது கிருஷ்ண பகவானுக்கு நேர்த்தி வெச்சோம் குழந்தை சுகமாக பிறக்க வேண்டும் என்று கிருஷ்ணர் நீல நிறம் அல்லவா அதனால நீ பிறந்தப்போ உன்னை அப்படி கூப்பிடுவோம்" பாட்டி சமாளித்தாள் நீ பத்து வயசு வரும் வரை பகவான் தந்த மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும்.பத்து வயது வரை பகவானின் பிள்ளை அதன் பின்புதான்அப்பா அம்மா உன்னை விடுமுறைக்கு
வெளியில் கூட்டிச் செல்லலாம் .அதுவரை எங்கும் போக முடியாது .பள்ளியில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு கூட பகவான் அனுமதி தர வேண்டும் என்று ஒருவாறு தமக்குத் தெரிந்த பொய் எல்லாம் சொல்லி தாத்தாவும் பாட்டியும் ஒருவாறு அம்மூச்சியை சாப்பிடவைத்தனர்..
"பகவான் எப்படி இருப்பார் தாத்தா" அம்முச்சி மறுபடியும் ஆரம்பித்து விட்டாள்
தாத்தா வெள்ளைத்தாளில் அழகாக கிருஷ்ணரின் படம் வரைந்து நீல வர்ணம் தீட்டினார். தாத்தாவின் படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே தாத்தா பாட்டிக்கு நடுவில் தூங்கி விட்டாள் அம்முச்சி .

வெளியில் மழை தூறிக் கொண்டே இருந்தது கொல்லை புறத்தில் ஓயாமல் கத்திக் கொன்டே இருந்த ஆட்டின் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்த பாட்டி அம்மூச்சியைத் தேடினாள் காணவில்லை. தாத்தாவை எழுப்பி அக்கம் பக்கத்தில் எங்காவது போயிருப்பாளா என்று பார்த்தால் ஆட்டுக்கு குட்டியையும் காணவில்லை தாய் ஆடு கத்திகொண்டே இருந்தது
கூடத்தைக் கடந்து செல்கையில் பூஜை அறையின் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது தரையெங்கும் நீல வர்ணத்தில் அவள் வரைந்த கிருஷ்ணரின் படங்கள் தரையெங்கும் நிறைந்து கிடக்க நீலக்குழந்தையாய் தூங்கி கொண்டிருந்தாள் அம்மூச்சி அவள் அன்புக்குரிய செல்ல ஆட்டுக்கு குட்டியுடன் நிரந்தரமாக ..

எழுதியவர் : சிவநாதன் (12-Jun-17, 7:03 am)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : neelak kuzhanthai
பார்வை : 300

மேலே