துயரங்களின் அறுவடைக்காலம்

உல்லாசமாகத் துளாவும்
தும்பிகளை
ஓலையில் சரியும்
தென்னைமர அணிகளை
பக்கத்து வீட்டு
மாதுள செம்பூக்களை
தானியம் பொறுக்கும்
அழகிய பறவைகளை
நெல்லிக்காய்கள் சிந்திய
பின்வீட்டு கூரையை
மேய்ச்சல் முடிந்த ஆடுகளின்
சாயுங்கால வெப்பத்தை
எதிர்பாரமல் ஒலிக்கும்
மிக பிடித்த பாடலை
எப்போதுமே விரும்பும்
வேப்பமர நிழலை
என எதையுமே
பரிச்சயமான சாயலில்
ரசிக்க மனமில்லை
லகுவாக நான் பெற்றுக்கொண்ட
இந்த கனத்த வெறுமை
என் துயரங்களின்
அறுவடைக்காலமாக இருக்கலாம்
கடக்கமுடியாத மீளமுடியாத
ஆயுட்கால தீர்மானங்களாக இருக்கலாம்
தன்னிச்சையாக இதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
பெரும் துளியிட்டு
யாரும் பேசகூட வேண்டாம்
இதையாவது படித்து விடுங்கள்
காளான் முளைவதற்குள்
- கோபி சேகுவேரா