பார்வை இல்லை நானும் கடவுளே
காண கண்கோடி வேண்டும் என்பர் – அந்த
கோடியில் ஒன்றிருந்தாலும் நன் கண்டிருப்பேன்
கற்பனை என்பார் கனவுகள் என்பாய்
அவை மட்டுமே என்னுள் உலவுகின்றன
கருவறை இருட்டினை காலம் முழுதும் வாழ்கின்றேன்.
உணர்வுகளால் வாழுகின்றேன் உருவங்கள் தெரியாமல்
பாரெங்கும் உலவுகின்றேன் உன் பேரழகினை அறியாமல்
தாய்முகம் கண்டிலேன் நான் – அவள் அன்பு குரல் போதும்
மகனே என்றழைக்கும் அவள் மதிமுகம் நானுணர்வேன்
எனக்காக தன்னை உலகுக்கு அற்பணித்தவள் அவளே!
இசையை ரசிக்கும் இருசெவி கொடுத்தாய்
அன்பு செய்ய அன்னை தந்தை கொடுத்தாய்
உணவு உடை உறையுள் கொடுத்தாய்
கற்பனைகள் பலசெய்ய நல்லறிவு கொடுத்தாய்
நினக்கு நன்றி சொல்ல என்னில் வார்த்தை இல்லை
நான் எனக்கு ஓர் உருவம் கொடுத்தேன்
பெற்றோருக்கு உருவம் கொடுத்தேன்
எனக்கென்று ஓர் உலகம் செய்தேன்
அதிலே உனக்கும் ஓர் உருவம் கொடுத்தேன்
படைத்தவன் நீயே ஆயினும் நானும் கடவுளே.!
கண்ணில் தான் பார்வை இல்லை
அனால் நான்காணும் உலகம் பெரிது, அழகானது
நான் காணும் கனவுகள் புதிதானது
கண்ட காட்சிகளே மனதில் நிற்கும் என்பர்
காணாமலே என்னுள் பற்பல ஓவியங்கள்
என்னில் ஆடும் மயில்களை நீ ரசிக்க முடியாது
என்னுள் எழும் மின்னல்களை நீ உணர முடியாது
என்மனதில் பூக்கும் பூக்களின் நிறங்கள் ஓராயிரம்
எனக்குள் வீசும் தென்றலும் எனப்பார்த்து சிரித்திடும்
நிலவும் எனக்கு துணையாக பகலில்கூட வந்திடும்.
இரு விழிகளை தொலைத்த எனக்கு
கற்பனை என்னும் வழி கொடுத்தாய்
விழி தொலைத்து வழி இழந்தோர்க்கு
வழியாக நான் மாறுகின்றேன் - காணாத
காலம் அதை கற்பனையால் கடக்கின்றேன்..