தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 15--முஹம்மத் ஸர்பான்
141.மேகங்கள் உறங்கும் அடர் இருளில்
அதிசய பூக்கள் பாலைவன உரமாகிறது
142.அசுத்தம் நிறைந்த படைப்பின் உள்ளங்கள்
அமைதியான உலகை நாசம் செய்கிறது
143.என் கதவை தட்டும் நிசப்தங்கள்
உமிழ்நீர் படிந்த பூக்களின் வாசனை
144.கனவுகளை நினைக்க மறுத்தாலும்
உள்ளம் துடிப்பதை நிறுத்த முடியாது
145.கலைஞன் தவழத் தொடங்கும் போது
விமர்சனங்கள் குழி தோண்டிக் காட்டும்
146.பட்டாடைகளை சொல்லில் வைத்து
தூமத்துணியை இதழாக்கியது 'அரசியல்'
147.தொப்புள் கொடி எழுதிய புத்தகத்தில்
அச்சுப் பிழையான நூலகம் 'ஊனங்கள்'
148.ஒரு கவிதை கண்ணீர் சிந்தி அழுகிறது
வாசித்த கவிஞன் பிறவி ஊமை என்பதால்
149.வானை விட்டு பிரியாத விண் மீன்கள்
மேகங்களின் பாலியலில் பகலைத் தந்தது
150.நான் வாசித்த வெண்ணிலவின் சுயசரிதையில்
ஆயிரம் மலடிகளின் தாலாட்டுப் பக்கங்கள்