வீரத்துறவி

காவி கட்டி சாந்தம் சொன்னவர்
இங்கு பலருண்டு!
காவி கட்டி வீரம் சொன்னவன்
நீ ஒருவன் தான்!

மோனநிலையில் முக்தி கண்டவர்
இங்கு பலருண்டு!
மோனநிலையில் தேசபக்தி கண்டவன்
நீ ஒருவன் தான்!

ஆழ்கடல்தன்னில் அமைதி கண்டவர்
இங்கு பலருண்டு!
அலைகடல் மீது அமைதி கண்டவன்
நீ ஒருவன் தான்!

கையைக் கட்டி சும்மா இருந்தவர்
இங்கு பலருண்டு!
கையைக்கட்டி செயல்கள் புரிந்தவன்
நீ ஒருவன் தான்!

வெளிநாடு பற்றிப் பெருமை பேசுபவர்
இங்கு பலருண்டு!
வெளிநாடு சென்று நம் பெருமை சொன்னவன்
நீ ஒருவன் தான்!

தெளிவு தேடி வள்ளுவன் நாடி சென்றவர்
இங்கு பலருண்டு!
தென்குமரியில் வள்ளுவனை நாடிவர வைத்தவன்
நீ ஒருவன் தான்!

உன் போல் புதல்வன் பெற்றது, பாரதம்
வாங்கி வந்த வரந்தான்
உன்போல் யாவரும் விவேகம் பெற்றால்
பாரதம் எங்கும் ஆனந்தம் தான்!

எழுதியவர் : (4-Jul-17, 1:41 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 73

மேலே