எரிமலையின்கீழ் ஒரு பனிநதி
என்னோடிணங்கி யிருப்பதைவிட
எரிமலையின் மீதமர்ந்து
தியானம் செய்தல் எளிது
எப்போது வெடிப்பேனென்று
எனக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது
உள்ளே பூ வளர்க்கும் நான்தான்
வெளியே தீ வளர்க்கிறேன்
பாதங்களுக்குக் கீழ்
மணல் பறிக்கும்
அலையின் கரங்களென
உன் அன்பு
என்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது
உன் அதீத அன்பில்
உருகி மறைந்துவிடுவேனோ என்கிற பயம்
உள்ளுக்குள் இல்லாமலில்லை
மனத்தால் நெருங்கி
உடலால் விலகும்
மாய வித்தை
பிடித்திருக்கிறதோ உனக்கு ?
ரகசியக் கண்களால்
நீ பார்த்துக்கொண்டிருப்பதால்
எப்போதும்
உன்னருகில் நான்
இடையிலிருக்கும்
செயற்கைத் திரைகளை
விலக்கிவிட்டு
எப்போது சிரிப்பாய் நீ !
#மதிபாலன்