தாத்தாவின் ஆவி

நள்ளிரவு நேரம்....

அவர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்..
சுற்றிலும் நிசப்தம்..
இலைகள் கூட ஆட மறந்து போய்
ஒரு கருப்பு பேய் போல அமைதியாய்
இருக்கிறது....
சுவர் கோழிகள் கார்க் கார்க்
என்று கத்திக்கொண்டிருக்கிறது...
தூரத்தில் நாய் ஒன்று அரவம் கேட்டு குரைக்கிறது...
இருவரில் ஒருவன் கல்லெடுத்து எறிந்தான் ...
சனியன் தூ போய் தொலை...

கல் குறி தவறாமல் நாய் மீது பட்டு
நாய் வள்... என்று வாலை காலுக்கிடையே
சுருட்டி வைத்துக்கொண்டு ஓடியது...

அவர்கள் கருப்பன் முருகன்

பக்கத்து ஊரில் சினிமா இரவு ஆட்டம்
பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தார்கள்...
சைக்கிளில் தான் போனார்கள் ஆனால்
சைக்கிள் பஞ்சர் ஆக்கிவிடவே
உருட்டிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்...

மச்சி ஊர் போய் சேர இன்னும் எவ்ளோ நேரம்டா...?

எனக்கேன்ன தெரியும் நானும் உன்கூட தான வரேன்...
இன்னும் ரொம்ப தூரம் நடக்கணுமேடா...

சே சனியன் பிடிச்ச சைக்கிள் இப்படியா பஞ்சர்
ஆகித்தொலையனும்...? அலுத்துக்கொண்டான் முருகன்...

மச்சி போர் அடிக்கிது எதாவது பேசுடா...?

என்னத்த பேசுறது...?

எதாவது பேசு இல்ல கத
சொல்லு...


ம்ம்ம்ம்ம்ம்......
ரொம்ப நேரம் யோசித்த கருப்பன்

சரி நான் கதை சொல்றேன்...
இதுல பேய் வரும் பரவா இல்லையா..?

என்னது பேய்யா..?
சூப்பர் மச்சி சொல்லு சொல்லு ரொம்ப இன்டர்ஸ்டிங்...

அதோ தெரியுது பாத்தியா வயக்காட்டு..

ஆமா அதுக்கென்ன..??

மச்சி கதையை கேளு இடையில ஏதும்
பேசாம வா...

சரி மச்சி நீ சொல்லு..

அதோ தெரியுது பாரு வயக்காடு ...
என்னோட சின்ன வயசுல அந்த நிலம் எங்களுக்கு சொந்தமா
இருந்த்துச்சு..

எங்க தாத்தா தான் அங்க எல்லா வேலையும்
பார்த்துக்கிடுவாரு...

எங்க தாத்தா இறந்ததும் எங்க பாட்டி கோமதியம்மா
தான் எல்லாத்தையும் பார்த்துக்கிடுச்சு
ஒருநாள் விடிகாலையில் கழனில தண்ணி இறைக்க போச்சு...
கழனில தண்ணி இறைச்சதும்..
சித்த உக்காரலாம்னு வரப்பு மேட்டுல உக்காந்துருக்கு...
சுத்தி ஒரு ஈ காக்கா கூட இல்லயாம்...

அப்போ பார்த்து கோமதி கோமதினு
யாரோ ஏன் பாட்டியை கூப்பிட குரல் கேட்டுச்சாம்..

பாட்டியும் யாரு யாருனு சுத்தி முத்தி
தேடி பார்க்க ஒருத்தரையும் காணல...

மறுபடியும்

" கோமதி கோமதி"

என் பாட்டி அரண்டு போச்சு...
என்னடா ஆளைக்காணும் குரல் மட்டும் வருதேன்னு...

கோமதி கோமதினு குரல்
ரொம்ப பக்கத்தில் கேட்கவும்...

என் பாட்டி சடக்குனு திரும்பி பார்த்துருக்கு...

திரும்பி பார்த்தா அங்க என் செத்து போன தாத்தா நிக்கிறார்...

"கோமதி என்ன மறந்துட்டியா...??
நீ இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..
வா என் கூட வந்துரு வா வா.."

பாட்டி ரொம்ப பயந்துருச்சு...
என்ன பண்றது எது பண்றதுனு அதுக்கு
ஒரு நிமிஷம் புரியல...

சடக்குன்னு எந்துச்சு நடக்க ஆரமிச்சுருச்சு...

பின்னாடி

கோமதி கோமதி
நில்லு நில்லுனு
தாத்தா சொன்னாராம் ...
ஒருசமயம் அழுதாராம்
இன்னொரு சமயம்
கோவமா கத்துனராம்..

பாட்டி பின்னாடி திரும்பி கூட
பாக்கலையாம்...
திரும்பி பார்த்தா அந்த தாத்தா பேய்
கன்னத்துல அறைஞ்சே கொன்றுக்குமாம்...

அப்படியே திரும்பி பார்க்கமா நடந்தே
வயக்காட்டு முடிவுல இருக்குற கோவில் வர வந்துருச்சு

அப்புறம் திரும்பி பார்த்துருக்கு...

திரும்பி பார்த்தா...


அங்க தாத்தா
கண்ணு இருக்கவேண்டிய இடத்துல
வெறும் முட்ட தான் இருந்துருக்கு....

" தப்பிச்சுட்ட கோமதி
தப்பிச்சுட்ட...."
என்னைக்கவது மறுபடி மாட்டுவடி..
அப்படினு
தாத்தா வெறித்தனமா கத்துனராம்....

அத பார்த்துட்டே வீட்டுக்கு வந்த
பாட்டிக்கு ரெண்டு வாரம் பயங்கர காய்ச்சல்...

டேய் போதும்டா...
ரொம்ப பயமா இருக்குடா...
என் செத்து போன தாத்தா
நியாபகம் வருது.. என்றான் முருகன்

மச்சி இரு இன்னும் முடிக்கல...

எங்க பாட்டி காய்ச்சலா கிடந்துச்சுனு சொன்னேன்ல,,,
காய்ச்சல் குணமானதும் ஒரு மாசம் கழிச்சு எங்க அம்மா கிட்ட
வயக்காட்டு வர போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போச்சாம்...
போனது திரும்பி வீடு வந்தே சேரல...

வேலைக்கு போயிட்டு வந்த எங்க அப்பா கிட்ட
அம்மா விஷயம் சொல்லுக்கு,,
அப்பாவும் எங்கங்கவோ தேடிட்டு கடைசில
வயக்காட்டுல போய் பார்த்துக்கிருக்காரு....

அங்க பாட்டி
செத்து போய் கிடந்துருக்கு...!!!!!
கன்னத்துல யாரோ பலமா அறைஞ்ச மாதிரி
ரத்தம் கக்கி போய் செத்து கிடக்கு.....!!!


கருப்பன் சொல்லிக்கொண்டே வர
முருகனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே
திரும்பி பார்த்தான் கருப்பன்...

அங்கே முருகன் எப்போவோ மயக்கமாகி விழுந்து கிடந்தான்.....


எழுதியவர்
அருள் ஜெ

எழுதியவர் : அருள்.ஜெ (11-Jul-17, 2:06 pm)
சேர்த்தது : அருள் ஜெ
Tanglish : thaaththaavin aavi
பார்வை : 629

மேலே