தோட்டம்
வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை.
வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ ஒரு யோசனை. வீட்டைச் சுற்றி இடமிருந்தாலோ அல்லது மாடியிலோ தோட்டம் அமைக்கலாம்.
மனமிருந்தால் மார்கமுண்டு
தோட்டம் அமைப்பதற்கு இதுதான் சரியான நேரம். எப்படி என்று கேட்கின்றீர்களா? மழைக் காலம் துவங்கிவிட்டது. இனி எந்த இடத்தில் செடியை வைத்தாலும் அது உயிர் பெற்றுக் கொள்ளும் இந்த மழையின் ஆதரவால். எனவே செடி வளர்க்க துவங்குங்கள்.
தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம்.
வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம்.
வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம்.
லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லால் மருதாணி, வாழை இலை, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.
சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்கலாம்..
அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள்.
ஒரு சில குரோட்டன்ஸ் செடிகளுக்கு தினமும் சூரிய வெளிச்சம் தேவைப்படாது. அதுபோன்றவற்றை வாங்கி வீட்டிற்குள்ளேயே வைக்கலாம். வாரத்தில் ஒரு சில நாட்களுக்கு மட்டும் அவற்றை வெளியே வைத்துவிட்டால் போதும். வீட்டிற்கும் அழகு சேர்க்கும்.
நீங்கள் வளர்க்கும் செடி ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும். அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும்.
நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்.
மேலும் மருத்துவக் குணங்கள் கொண்ட கற்பூரவள்ளிச் செடி, துளசி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வேம்பு போன்றவற்றை வளர்ப்பதால் பலருக்கும் பலனளிக்கும் வகையில் அமையும். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் நிச்சயம் இருக்க வேண்டிய செடிகள் இவை.
கடுகு விதைகளைத் தூவினால் கடுகுச் செடி, வெந்தயத்தை தூவி வெந்தயக் கீரை, தனியாவைத் தூவினால் கொத்துமல்லிச் செடி, புதினா கீரை மற்றும் புளிச்சக் கிரைகளில் இலையை உருவி விட்டு மிச்சமிருக்கும் தண்டை சொருகி விட்டால் புதினாச் செடி, புளிச்சக் கீரைச் செடி கிடைத்துவிடப் போகிறது.
செடிகளைக் காக்க பல்வேறு கை மருந்துகளையும் நீங்கள் உபயோகித்தாக வேண்டும். பூச்செடிகளுக்கு டீத் தூள், முட்டை ஓடுகளைப் போட்டு பராமரிக்க வேண்டும்.
காய்கறிச் செடிகளாக இருந்தால் செம்மண் போட்டால் நல்ல வளமாக வளரும். பூச்சிகளை அண்ட விடாமல் சாம்பல் தெளித்தால் கூட போதும்.
தினமும் காலையிலும், மாலையிலும் சரியான அளவிற்கு தண்ணீர் விடுங்கள். மதிய வேளையில் தண்ணீர் ஊற்றுவது மிகவும் தவறு.
அக்கறையுடனும், சரியான பராமரிப்புடனும் செடி வளர்க்கத் துவங்கினால் தோட்டமும், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஒரு சேர வளர்ந்து நிற்கும் ஆலமரமாய்.
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.