வரம்

கண்முன் இறைவன் கனிவாய் வந்து
என்னடா வரம் வேண்டும் என்றார்
முதலில் நீதான் கடவுள் என்றால்
அதிலே உண்மை உளதா என்றேன்
அதற்கும் சாட்சி வேண்டும் என்றால்
அதற்கொரு தேவை எனக்கி்லை என்றார்
கோபம் கொண்டு கடவுள் போக
வாரும் வரம்தனை தாரும் என்றேன்
கேட்டால் தானே தரணும் என்று
போட்டார் கடவுள் ஒரே போடு
கடவுள் கூட முன்னே வந்தால்
கடவுச் சொல்லால் அறியும் காலம்
கடவுள் வருவார் வரம்தனை தருவார்
என்றெனக்கு எப்படி தெரியும்
அதனால் நானும் தலையை தடவ
நாளை வரவா என்றவர் விணவ
இன்றே கேட்பேன் என்றேன் நானும்.
அறிஞன் கவிஞன் புலவன் தலைவன்
ஆகும் வரமது தந்திடு வென்றேன்
எல்லாம் சரிதான் ஆனால் நீயும்
மனிதன் தானா முதலில் என்று
கடவுள் என்னிடம் கனலை காட்ட
படைத்தவன் நீயே படைப்பிடம் வந்து
அடுத்தவன் போல கேள்விகள் எதற்கு
மனிதப் பிறவி கொடுத்து விட்டு
மனிதனா எனும் கேள்வி் எதற்கு
என்றே நானும் எம்பி குதித்திட
பண்பாய் இறைவன் பதிலைத்தந்தார்.
நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் கணக்கும்
அனைத்து உண்மையும் என்பது தெரிந்தும்
உணர்த்த வந்தவன் இறைவன் - அதை
உணரத் துடித்தேன் இளையவன்.
உயிர்கள் தன்னை படைக்கும் பொழுது
உயர்ந்த உயிரை படைக்க நினைத்தேன்
என்னை போன்ற வல்லமை கொண்டு
எந்தன் எல்லா இயல்பும் தந்து
மண்ணில் தந்தேன் உயிராக
மனிதன் என்னும் பெயராக
படைப்பில் உனக்கு பங்கும் தந்தேன்
படைப்பின் அங்கம் நீயும் என்றேன்
ஆறாம் அறிவை உன்னிடம் தந்து
பாராய் படைத்திட வாராய் என்றேன்
எல்லாம் செய்தது எதற்காக
உன்னால் உலகை வளமாக்க
ஆனால் நீயோ எல்லாம் மறந்து
வீணாய் போனாய் மனிதா இன்று
உலகம் முழுதும் உன் வசம் என்றாய்
சிலிர்ப்பேன் என்றா நினைத்தாய்
சலிப்பேன் அது தான் முடியும்.
நீயே உன் வசம் இல்லா பொழுதில்
உலகம் எங்கே உன்வசம் சொல்
இயற்கை வளங்கள் எல்லாம் அழித்தாய்
செயற்கை ஒன்றே இயற்கை என்றாய்
மண்ணினை அழித்தாய் மரங்களை அழித்தாய்
மண்ணின் உயிர்கள் முழுதும் அழித்தாய்
உலகின் வளங்கள் எல்லாம் அழித்து
உலகம் எல்லாம் உன் வசம் என்பது
உன்னை புதைக்க உனக்கு நீயே
பண்ணிக் கொண்ட பெட்டி போன்று
மனிதம் உன்னில் மலர்ந்ததுமில்லை
மனிதனாய் நீ வாழ்ந்ததுமில்லை
படைத்தவன் நீயோ படைப்பின் அடிமை
வசதிக்காக செய்தவை கொண்டு
அசதி ஆனாய் மனிதா இன்று
உலகின் அரசன் அல்ல நீ
உலகின் மாபெரும் அடிமை நீ
உன்னால் செய்த பணத்தின் அடிமை
உன்னை வெல்லும் நேரத்தின் அடிமை
விலங்குகள் எல்லாம் இயல்பில் இருக்க
மனிதா நீயோ மறந்து போனாய்
அதனால் மனிதா கோபம் கொண்டு
வந்தேன் நானும் உன்னிடம் இன்று
உந்தன் இயல்பு என்னவென்று
உணர்வாய் மனிதா விழித்துக் கொண்டு
இறைவன் சொன்ன சங்கதி எல்லாம்
உறைத்தது எனினும் மறைத்துக் கொண்டேன்
ஆனால் இறைவா உன்னிடம் கேட்பேன்
வாழத்தானே வேண்டும் நானும்
பணமும் மணியும் இல்லா வாழ்வில்
வறுமை மட்டும் விரியும் நாளும்
ஓடுதல் தானே மனிதன் இயல்பு
நிற்பது என்பது இயலா ஒன்று
சரியா என்பது தெரியாமல்
உரைத்தேன் இறைவனின் முன்னாலே
சிரித்தார் இறைவன் அதன்பின் உரைத்தார்
கண்கள் மூடி இதயம் திறக்கும்
கணமே உன்னில் கவிதை பிறக்கும்
ஓடும் வாழ்வின் வேகம் குறைத்து
பாடும் குயிலில் கவணம் செலுத்து
இதயம் உடலின் பாகம் அல்ல
இதயம் அன்பின் உறைவிடம் என்று
உணர்ந்தால் மனிதா அதுவே நன்று.
உலகின் தலைவன் நீதான் மனிதா
உயிர்கள் உந்தன் அடிமை அன்று
அதுவும் எந்தன் படைப்பில் ஒன்று
வாழும் உரிமை அதற்கும் உண்டு
சுயநலம் தவிர்த்து வாழ்ந்திடும் போதில்
சுற்றுப்புறமும் சுற்றம் ஆகும்
எல்லோருக்கும் நேரம் தந்தாய்
உனக்கொரு நேரம் ஏன் மறந்தாய்
இன்னும் பலவும் என்னிடம் உண்டு
நீயே உணர்தல் அதுதான் நன்று
விழித்திடு மனிதா இக்கணமே
உணர்ந்திடு படைப்பின் இலக்கணமே
என்றே சொன்னவர் செல்வேன் என்றார்
எங்கே வரம் என்றேன் நானும்
இன்றே நீயும் கவிஞன் என்று
இறைவன் சொன்ன வரிகள் கொண்டு
தொடுத்தேன் ஒரு பூமாலை
இதுவே அந்த பாமாலை

எழுதியவர் : சுதாகர் (25-Jul-17, 12:07 pm)
சேர்த்தது : சுதாகர்
Tanglish : varam
பார்வை : 159

மேலே