விழித்தெழுவீர் வழிகாண

******************************
மண்மீது படிந்துள்ள
மிச்சத்தின் எச்சமான
மனிதத்தின் துகள்களும்
மறையத் தொடங்குது ..

கண்ணில் தெரிந்த
நேசத்தின் கழிவுகளும்
காலத்தின் கோலத்தால்
காற்றில் பறந்துவிட்டது...

நெஞ்சில் படர்ந்திருந்த
ஈரத்தின் சுவடுகளும்
ஊழலெனும் உஷ்ணத்தால்
காய்ந்த வெட்டவெளியானது...

உரிமையை நிலைநாட்டும்
கருத்து சுதந்திரங்களும்
சட்டமெனும் அடக்குமுறையால்
இருட்டறைக்குத் தள்ளப்படுகிறது..

எடுத்துரைக்கும் உண்மைகள்
எதேச்சதிகார கொடுமையால்
சர்வாதிகாரப் போக்கினால்
அடித்து நொறுக்கப்படுகிறது...

எதற்கும் வாய்திறக்காமல்
எதையும் தாங்கிக்கொள்ளும்
அப்பாவி சமுதாயமும்
அடிமைகளாக மாறிவிட்டது...

சுதந்திரம் பறிபோனது
வாழ்வாதாரம் வற்றிவிட்டது
சமத்துவம் சவக்கிடங்கானது
சாதிமதவெறி பேயாட்டமாடுது...

காழ்ப்புணர்ச்சிப் பெருக்கெடுத்து
பழிவாங்கல் படையெடுக்குது
அரசியல் அலங்கோலங்கள்
ஜனநாயகத்தை அழிக்கிறது...

வருங்காலம் கேள்விக்குறியாகி
எதிர்கால தலைமுறைகளும்
ஏக்கத்துடன் வாழ்கின்றனர்
தூக்கமின்றித் தவிக்கின்றனர்...

பாடுபட்ட தலைவரெல்லாம்
பாட்டில்மட்டும் வலம்வருவது
பழகிப்போன ஒன்றானது
பாழாய்ப்போன சமூகத்தில்...

விழித்தெழுவீர் வழிகாண
துயரனைத்தையும் துடைத்திட
எழுச்சியுடன் வீறுநடைபோட
தலைமுறைகள் வாழ்ந்திட....!!!

பழனி குமார்
29.07.2017


Close (X)

5 (5)
  

மேலே