வறுமையின் பக்கங்கள்
.........வறுமையின் பக்கங்கள்.......
எண்ணங்களில் மட்டுமே
வண்ணங்களைச் சுமந்து
வாழும் வாழ்க்கையில்
குடத்திலுள்ள தண்ணீரை விட
கண்களை நிறைக்கும்
கண்ணீரே அதிகம் அங்கு...
ஆடைகளில் பதுங்கும்
கறையான்களும் மழை
வந்தால் ஓடி ஒளிய
இடமற்றுத் தவிக்கிறது
ஓட்டைகளை அடைக்கும்
ஊசி நூல்களும் அங்கே
தைத்துத் தைத்து
ஓய்ந்திருப்பதால்....
குடிசைக்குள் குடியிருக்கும்
மின்மினிப் பூச்சிகளை
அவர்கள் ரசிப்பதில்லை
இரு கரம் கூப்பி
வணங்குகிறார்கள்
கும்மிருட்டு சூழ்ந்த
அவர்கள் வீட்டை அவை
ஒளி விளக்காய்
மாற்றுவதால்......
பரவிக் கிடக்கும் பசியின்
தட்டுக்களில் தெரியும்
இடைவெளிகளை அங்கே
உணவுகள் நிரப்புவதில்லை
வறுமையின் முகவரியே
அதில் முத்திரை பதித்துச்
செல்கிறது...