கிறுக்கியின் கிறுக்கல்கள் - 10

நீ சூடிக்கொண்ட ரோஜா
பொறுப்புத் துறப்பு செய்தே
தப்பித்துக்கொள்கிறது
நீ சூடாத மலர்களிடமிருந்து..!
***
உன் அணிகலன்களை
அசைய விட்டே
என்னை இசைய
வைத்துவிடுகிறாய்..!
***
தீயாய் சுடும் உன் பார்வையை
மட்டுமாவது வீசிவிட்டு போ
உன் விழி தீண்டி
என் விரதம் கலையட்டும்..!
***
இதென்ன ரோஜா கனக்கிறதே..!
இதழ்களுக்கிடையே உன் இதயத்தை
இணைத்திருக்கிறாயா?
***
உன் பார்வை ஒன்றே போதும்
என்னை சிறை வைக்கவும்..!
சிதற வைக்கவும்..!
***
தலைகோதிய உன் விரல்களால்
கைவிடப்பட்ட அந்த ஒற்றை முடி
சொல்லியது
உன் வருடலில் வலுவிழந்ததை..!
***
இரக்கமின்றி சிரிக்காதே
கிறுக்கியெனக்குள்
தானாகவே வந்துவிடுகிறது
கிறக்கம்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (1-Aug-17, 4:11 pm)
பார்வை : 253

மேலே