பணக்கார வீதியின் பிச்சைக்காரன்
வானவில் வண்ணங்களல்ல
எனது வாழ்வு !
மழைநீரில் கரைந்திடும்
மாய ஓவியங்கள் !!
விண்ணைத் தொடும்
வீடும் கூட தெருவோரம் தான்!
ஆனால்
அந்த தெருவில் கூட நானும்
ஓர் ஓரம் தான்!!
தட்டிக் கேட்கிறேன்
கை எட்டிக் கேட்கிறேன்
கடவுளிடம் அல்ல
கருணை உள்ளத்திடம்!!
விளைத்து உண்பவர்க்கும்
விளைந்ததை உண்பவர்க்கும்
மத்தியில் நான் மட்டும்
குப்பையில்
வீழ்ந்ததை உண்கிறேன்!!
வறுமைக்கோடு என்று நான்அறிந்தது எல்லாம்
என் வயிற்று சுருக்கங்கள்!!
எல்லோரும் எனக்கு
மகாராஜாக்கள் !
என்னை பார்ப்பவர்கள் கூட
எஜமானர்கள் தான்!!
நான் பெறும்
சில்லறை காசுகள்
கூட எனக்கு
பொற்காசுகள் தான்!!
எனது தட்டுக்களில் கூட
இசை பிறக்கிறது
சில்லறை காசுகளில் கூட
என்னுள்
சிரிப்பலை கேட்கிறது!!
பாதையில் நான் கூட
பாரம் தான்!
பார்ப்பவர்க்கு என் நிலை
பாவம் தான்!!
என் வீட்டின் கூரை வானம்
தெருநாயின் கூச்சலே
என் கானம்!!
யாரோ தந்த இந்த
தெருவிளக்குகள் தான்
என் வாசலின் கார்த்திகை தீபம்!!
கந்தல் துணி தான்
எனது
இரவு கம்பளிகள்!!
நான் உறங்கும் சுவரோரம்
'வறுமை ஒழிப்பு' வாசகங்கள்
இவையாவும்
அரசியல் சூசகங்கள்!!
நான் அறிந்த பல உறவில் கூட
நான் சொல்லும்
ஓர் உறவு "அம்மா"...!!
என்னை கடக்கும்
ஆயிரம் குரல்களில்
பசியிலும் நான்
சொல்வது ''அம்மா ! அம்மா…!''
காலமெல்லாம் என்
ஓவியம் பேசும்
இனி
கரையோர காவியமும்
வசை பாடும்
பணக்கார வீதியின் பிச்சைக்காரன் நான்.!!