சிட்டுக்குருவி
மனிதர்களே மனிதர்களே
கொஞ்சம் செவி சாய்ந்து
கேளுங்கள்!
நான் சிட்டுக்குருவி
பேசுகின்றேன்!!,
சிட்டுக்குருவி என்ற
பெயரில்
சிறகடித்து வாழ்ந்து வந்தேன்
கொஞ்சும் ஒரு உயிராக!
அந்த உயிர்
இன்னும் கொஞ்சம் உள்ளது
வெறும் பெயராக!!,
கூடி வாழவில்லை என்றாலும்
கூடுகட்டி வாழ்ந்து வந்தேன்
அழகாக
ஆனால்
இன்று அது எல்லாம்
மாறிவிட்டது அழிவாக!!,
குடிசைகளிலும்
கோபுரங்களிலும்
பறந்தோம்
கொடியைத் தாண்டி உயரமாக!
ஆனால் ஒரு
கொடிய நோய் ஒன்று
எங்களை தாக்கியது துயரமாக!!,
தொடு வானத்தை
தொடுகின்ற அளவில்
தொங்கிக் கிடந்தேன்
தூக்கனாங்குருவி என்று!
ஆனால்
தொலைவில் தனியாக தொங்கும்
கூடுகள் எல்லாம் கேட்க்கின்றது
நீ
எங்கே என்று!!,
தொடும் தொலைவில் இருந்த
வானமும் எங்களை.
தொந்தரவு என்று நினைக்கவில்லை!
ஆனால்
தொலைவில் இருக்கின்ற
மனித இனம் எங்களை
தொந்தரவு என்று
நினைத்துவிட்டதோ?!
தொந்தரவு என்று!!
அதனால் தான்
எங்களை அழிக்க வந்ததோ?!
படைக்கொண்டு!!!,
வறுமையில் வாழ்ந்தவர்கள்
எல்லாம்
எங்களை வாழ வைத்தனர்!
ஆனால்
வசதி வந்தவர்கள் எல்லாம்
எங்களை வழி அனுப்பி வைத்தனர்!!
வந்துவிடு
என்று அல்ல
வராமல் சென்றுவிடு என்று!!,
தொலை தூரத்தில்
இருந்து தொடர்பு கொள்ள
கண்டுபிடித்த தொலைபேசி
அதில்
இருந்தே எங்கள் இனம்
தொலைந்துப்போச்சு,
மாண்புமிகு மனிதர்களே
உங்களுக்கு
ஆறு அறிவு இருந்து
என்ன பயன்?!
அறியும் அறிவியல் இருந்தும்
என்ன பயன்?!
கண்முன் அழியும் ஒரு இனத்தை
காப்பாற்ற முடியாமல்
இருக்கும் வேளையில்
கணினி கண்டுபிடித்தும்
என்ன பயன்?!!
அறிவியல் என்ற
ஒன்று
சென்றுக்கொண்டிருக்கின்றது
சில ஆய்வுகளை நோக்கி!
அதனுடனே
காலம் சென்றுக் கொண்டிருக்கின்றது
அழிவை நோக்கி!!,
நான் அழியும்
வேளையில்
என்னைக் கண்டு சிரிக்கும்
நீயும்
சிந்திப்பாய் ஒருநாள் பகுத்தறிவு
கொண்ட மனிதனாக!
அப்போது
பிற உயிர்கள்
இருந்தால் உன்னை பார்க்கும்
பிணமாக!!,
காரணம் நீயும் ஒரு உயிர்தான்...
...........................................................
இப்படிக்கு
சிட்டுக்கருவி