நீரின்றி உலகில்லை -- கவியரங்கம்

நீரின்றி உலகில்லை -- கவியரங்கம்

தமிழ் வணக்கம் :-

கதியேஎன தமிழேயுனை கனிவேதர போற்றி !!
சதியேயிலை வரமேதரு சகமேயினி நீயே !!
மதியாலுனை பணிவேனினி மறவேனுனை தாயே !!
விதியேயினி உனையேநினை விலகேனினி நானே !!!

அவையடக்கம் :-

குனமேநிறை அவையேகவி குறைவேயிலை எங்கும்
பணமேபெரி தெனவேநினை பதமேயிலை பாரீர் !!
மணமேதரு மலரேயுனை மறவேயினி என்றும் !
கணமேயினி எனவேவர கவியேயினி கேளீர் !!!

நீரின்றி உலகில்லை -- தலைப்பு

தண்ணீரே இல்லாத உலகத்தில்
------ தன்னலமாய் வாழ்கின்றான் மானிடனும் .
கண்ணீரே கரைபுரண்டே ஓடிடுமே
------- காப்பாற்ற வழியில்லை எம்மருங்கும்
விண்மழையும் பொய்த்ததனால் ஈங்கின்றே
------- விழிநீரே வெள்ளமாக மாறியதே .
உண்ணுதற்குச் சோறில்லை புவிதனிலே
------ உறங்குதற்கும் இடமில்லை சோகந்தான் !!


கடல்நீரும் வற்றிப்போய் நிற்கின்றது
------- காலத்தின் கொடுமையினால் எத்திசையும்
உடலினையும் பாதுகாக்கத் தண்ணீரே
------- உணவாகும் என்பதனை அறிவீரோ !
படகோட்டும் மீனவனும் துடிக்கின்றான்
------ பரிதவித்தும் போகின்றான் சுனாமியினால் .
உடன்பட்டு வருவதற்குத் தண்ணீரும்
------- உருவாக்கும் கண்ணீரே மிச்சமாகும் !!!


பருவமழை இல்லையெனில் விவசாயி
------- பதறியுமே சாகின்றான் வயல்வெளியில்
வரும்காலம் தப்பியதால் இந்நிலைமை .
------- வந்திடுமா வெப்பத்தைத் தணித்திடவே !
எருவாகும் உரமும்தான் என்செய்யும்
-------- எதிர்நோக்கும் மழையும்தான் பொய்த்தாலே
கருவறையில் இருந்தாலும் தண்ணீரே
------- கல்லறைக்குப் போனாலும் தண்ணீரே !!!

அதிகமாக பெய்தாலே வெள்ளமாகும்
------- அளவாகப் பெய்தாலே சிறப்பாகும் .
விதிதனையே மாற்றுகின்ற மனிதயினம்
------- விடிவெள்ளி மழைக்குமே ஏங்குகின்றான் .
சதியாக காற்றினையும் மாசாக்கிச்
------- சந்ததியைக் காப்பாற்ற தவறிவிட்டான்
மதியாலே வெல்லுகின்ற செயலிதுவாம்
------- மண்ணுலகில் தண்ணீரும் வேண்டுமென்பேன் !!!


நன்றியுரை:-

நன்றிகள் சொல்லிடு வேன் -- நாடு
நன்மைகள் பெற்றிட வேண்டிடு வேன்.
நன்னெறி சொல்லிடும் சங்கம் -- நாளும்
நல்கியும் பல்கியும் வேண்டிடும் எங்கும் !!! .

நன்றி ! வணக்கம் !

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
முகவரி :- 50 , சேதுராமன் பிள்ளை காலனி ,
டிவிஎஸ் . டோல்கேட் , திருச்சி - 20 .
தொடர்புக்கு :- 9443206012

மின்னஞ்சல் :- sarabass05@gmail . com

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (8-Aug-17, 11:03 am)
பார்வை : 133

மேலே