அம்பிகாபதி அமராவதி
அம்பிகாபதி அமராவதி
காப்பியத்தில் காதலையும் பார்த்தீரோ நீங்கள்
------ காலத்தால் அழியாத காவியமும் தானே .
பாப்புனையும் போட்டியிலே பாவியவன் தோற்று
------- பாவையினை மணமுடிக்க முடியாமற் போக
மாப்பிள்ளை ஆகுமுன்னே மங்கையினைப் பாட
------- மணக்கோலம் தப்பியதே என்றென்று சொல்ல .
கோப்பியமும் இஃதன்றோ கோமகளைத் தாங்கும்
------- கொள்கையுமே மாறியதே குலமகளும் அந்தோ !!
கம்பனது மைந்தனாக காசினியில் வந்தே
------- காதலிலே வீழ்ந்தானே அம்பிகாப திங்கே
அம்புவில்லும் மலர்க்கணையும் ஒன்றுசேர ஆங்கே
------- அமராவ தியினையுமே நேசித்தான் மன்னன் .
வம்பாக சூழ்ந்ததுவே ஊழ்வினையும் சோழன்
------- வாட்டமுற போட்டிதனை வைத்திட்டான் அன்றே .
எம்மருங்கும் பாப்புனையும் வல்லவனாம் காதல்
------- எத்திசையில் நின்றாலும் செல்பவனாம் என்றும் !!
பாடல்கள் நூறுதனை வனைதலுமே அங்கு
-------- பாடுதலோ காதலன்றி இருத்தலாம் பாவம்
ஆடவனும் அழகாகப் பாடிடவும் ஆங்கே
-------- அழகியவள் திரைமறைவில் தோன்றிடவும் ஏதோ
வாடமனம் கொண்டவனோ வாசமுடன் பாட
-------- வரிசையது தப்பியுமே போய்விடவும் பேதை
மாடத்தில் மலர்தனையும் எண்ணுகின்றாள் நூற்றை
------- மந்திரமாம் காதலிலே தாண்டுகின்றாள் காணீர் !!
மன்னவனோ போட்டியினைக் காரணம் சொல்லி
-------- மாசற்றக் காதலினைப் பிரிக்கின்றான் அந்தோ .
என்றென்றும் வஞ்சமுடன் நடந்துகொண்ட சோழன்
-------- எப்படியோ தன்மகளின் ஆசையினை மாற்றி
தன்னுடனே வைத்திட்டான் தலைமகளை பாவம்
-------- தலைவனுடை உயிரையுமே பறித்திடவே செய்தான்
பொன்னான காதலுமே தோல்வியினால் இங்கே
-------- பொய்த்துப்போய் வரலாற்றில் நின்றதுவே பாரீர் !!