காதல் தீவு
அன்புக் கடலில்
காதல் தேவனின்
ஆனந்தக் கல்வெட்டு
தீவினிலே...
இமைகளால் அலங்கரிக்கப்பட்டு
ஸ்வரங்களால் மீட்டப்பட்ட
எண்ணிக்கையில் அடங்காத
சொப்பனக் கூடாரங்கள்.
காதல் காற்றில்
வண்ணக் கனவுகளின்
வாலிப துள்ளல்கள்.
மின்னல் தூளிகளில்
மயக்கும் மெத்தைகள் - அதில்
மயிலிறகு போர்வைகள்.
பாசக் குயில்களின்
நேசிக்கும் நெஞ்சங்களில்
நித்தமும் பொழிகிறது
நிலா மழை.
வார்த்தைகள் பின்னும் பூக்கள்
வண்ணங்களோடு , நாணத்தையும்
சேர்த்தே சிந்துகிறது.
உதிர்ந்த வார்த்தைகளை எடுத்து
ஆசை நூலில் அழகாய்
கோர்க்கிறது தென்றல்.
கனவு குதிரைகளின்
காலடி தடங்களில்
களவு சொற்களின்
கவிதை திருவிழா.
தீவின் சிற்றின்பச் சிகரங்களில்
பேரின்ப நினைவுகளின் பெருமகிழ்ச்சி...
காதல் பரிமாற்றத்தில்,
சப்தங்களின் சூறாவளி
சங்கீதமாய் ஒலித்து
கலாபம் கட்டி ஆடிமுடித்து,
மௌன மேகங்களுக்கிடையில்
சுகமான மயக்கத்தில்
சுதியேற்றிக் கொள்கிறது.
உயிர்களின் ஆன்மாவில்
சிலிர்க்கும் நினைவுகளில்
மிதக்கும் மகிழ்ச்சிகளின்
மெல்லிசை மெட்டு...
இந்த ஆனந்த தீவை
நான் ஆவல் கொண்டு அளக்கையில்
பூக்கள் மழையில்
என் இதயம்
புல்லாங்குழல் ஆனது...
மூச்சின் வெப்பத்தில் மூழ்கி
முத்தத்தில் குளிர்ச்சி பெற்று
அணைப்பில் உறைந்து கிடந்து
இன்பத்தில் உருகித் திளைக்கும் உயிர்களின்
சொர்க்கத்தின் சொர்க்கம் காதல் தீவு...