மீ thinks

பொன்நிற நத்தைகளின் சிலிர்ப்பு

வானம் ரகசியங்களுக்குள் பிரிந்துகிடக்கின்றது
ஆகாயச் சுரங்கங்களில்
சூல் நிரம்பியிருக்கின்ற மேகங்கள்

காதலைப் பூரித்துக் கொண்டிருந்தாள்

மந்திரத்தறி பின்னுகின்ற மழையாகிறான்

தூவானம் சிதறுகிற உடலைத் துவட்டுகிறாள்

பொன்நிற நத்தைகள் ஊரும் அவன் கவிதைகள்...
அவளை அணைத்துக் கிடக்கின்றன

‘கவிதைகள்’ அவள் ‘உடலை’
கவிதை என்றே சொல்கின்றன
பின்னர் தமக்குத் தாமே
அவள் உடலில் புயலின் சீற்றமிருந்தது என்றும்...
மாசற்ற நதியின் பாடலெனவும்...
உருகுதலும் உறைதலுமான படிமங்களின்
பித்தாகியவள் எனவும்...
வர்ணிக்கத் தொடங்கியிருந்தன

வியாபகமாய் அவள் காதலைப் பூரித்துக் கொண்டிருந்தாள்
அவன் சுடச்சுட ஒளிரும் மழையாகிறான்

அவளுடையதாகிவிட்ட
பொன்நிற நத்தைகள் சிலிர்க்கின்றன


ஈரப்பதமான சடங்கு

உட்செல்லும் சடங்கிற்கான
ஒப்பனைகளோடு
சந்தித்துக்கொண்டோம்

கனவிலிருந்து தோன்றிய
பனிபோல நீ ஒளிர்ந்தாயெனில்
காற்றிலிருந்து சொட்டிய
இசையாகித் ததும்பினேன்

அது மாயச் சடங்குதான்

சொல்
வைரமென மின்னும்
மூக்குத்தியைப் பரிசளித்தாய்

பனி
காற்றின் இதயத்திலிருந்தபடி
கனவைக் காதலிப்பது பற்றிய
அவதிகளில் தத்தளித்தது

வழிபாடும்
கேளிக்கையுமான சடங்கு

யாருமறியா பௌர்ணமி இரவில்
காற்றும் பனியும்
ஈரப்பதமான காதலின் உதடுகளை
முத்தமிட்டு
உலர்த்திக்கொண்டிருந்தன.


விரகத்தைத் துளையிடுகிற மரங்கொத்தி

எரிவெள்ளிப் பொறி நான்
மழையால் மூடப்பட்டிருந்தேன்

பால்யங்களின் அலைகள்
சத்தமெழுப்பும் கர்வப் பெருங்கடல்

விரகத்தைத் துளையிடுகின்ற மரங்கொத்தி

தாபமேறி மஞ்சள் பாரித்திடும்
இலையுதிர்கால மர நிழலின்
பாழில் பரவுகின்ற மெல்லிய வெளிச்சம்

வெம்மையின் மலையடிவாரத்தில்
மோகச் சிறுத்தை துயில்கிறது

எலுமிச்சை வாசனைக்குள்
பச்சை வண்ணத்துப்பூச்சி
தாபச்சிறகு விரித்துப் பறக்கிறது

மேனி தன் ரகசியக் கோதுகளை உடைத்து
சிறகு சிலிர்த்தித் தலை நீட்டும்
நீ அப்போது கூடை நிறைந்த காடும்
கண்கள் நிறைந்த வானமுமாய்
முத்தமிடுவாய்...

மென்சொற்கள்

மெருகேறிய இரண்டு மென்சொற்கள்
மாபெரும் கடலையும்
ராட்சத மலையையும்
அருகருகே நகர்த்துகின்றன

பொன்னொளிர் நீலக்கடல் வாசனை
விண்மீன்கள் மினுங்கும் மலையுச்சியின் காரிருள்
அவனும் அவளுமாகினர்

தன் பிரமாண்டத்தில்
புதையுண்ட இரு உடல்களைப்
பிரமித்தபடியே
வானவில்லென
அவர்கள் மேல் பட்டுக்கிடந்தன இரு சொற்கள்

அவளது தோளில்
அலைகள் ஆர்ப்பரித்தன
அருள்பாலிக்கும் தன்னிகரில்லாத ஆலிங்கனத்தில்
மலை அதைக் கேட்டிருந்தது

அதி ரகசியமான அவ்விரு சொற்களும்
ஜின்னின் இரு தோகையென
வானளாவ விரிந்துகொண்டன...

எழுதியவர் : vetri (22-Aug-17, 12:22 pm)
பார்வை : 56

மேலே