தமிழழகு
ஆனந்தக் களிப்பு
தமிழிடம் அழகிற்கா பஞ்சம் ? - அதைத்
தான்சொல்ல வந்திடில் வார்த்தையே கெஞ்சும்
அமுதிற் கினிப்பிலா பஞ்சம் ? - அடி
ஆனந்தத் தமிழூஞ்சல் ஆடடி கொஞ்சம் !
வார்த்தை வசியங்கள் உண்டு - உனை
வாரிக் கடத்திடும் கவிமாரி உண்டு !
ஈர்க்கும் இலக்கணம் உண்டு - அதன்
இன்பத்திற் கலையுமே மனமெனும் வண்டு !
கட்டுரை புதினங்க ளுண்டு - மனக்
கண்களுக் கெட்டாத கற்பனை உண்டு
பட்டுப் புழுவிற்றொ டங்கி - அந்தப்
பாதாள மேலோகம் வரைசேதி உண்டு !
கடுமையாய்க் கல்வெட்டில் நின்று - பலர்
கருத்தினால் காகிதம் கணினியைக் கண்டு
தொடுதிரை தொட்டுவிட் டாச்சு - இனி
தொல்லையெல் லாம்நம் தமிழ்விட்டுப் போச்சு !
நல்ல தமிழ்தனைப் பாடு - அதில்
நாளும் மகிழ்ந்துநீ ஆடிக்கொண் டாடு !
சொல்லச் சொல்லத்தமிழ் ஓங்கும் - யார்
சொன்னது நந்தமிழ் அழகிலா சாகும் ?
-விவேக்பாரதி