காமேஸ்வரி

படம்பார்த்துச் சொன்ன கவி !

கையிற் கரும்புடனே - அருட்
கண்ணில் ஒளியுடனே
மெய்யில் நகையுடனே - உயிர்
மெய்யின் சுடரெனவே
வையகச் சக்தியினாள் - இவண்
வந்ததைக் காணுகையில்
தைய்யன தாவெனவே - கவிதை
தத்திப் பெருகாதோ ?

அன்னங் கொடுப்பவளை - மனத்தின்
அச்ச மறுப்பவளை
உன்னற் கெளியவளை - உயிருள்
ஊறிக் கிடப்பவளை
மின்னற் சுவைகொடுத்தே - கொஞ்சமாய்
மிரள வைப்பவளை
என்றும் பணிவமெனில் - நம்முளே
ஏற்றம் வளராதோ ?

பாதி நிலாவுடுத்தி - அருளைப்
பார்வை தனிலிருத்தி
ஆதிப் பரம்பொருளாய் - புதுமை
ஆறு கரத்தினளாய்
காதல் வளர்த்திடுவாள் - அம்மா
காமேஸ் வரியவளை
ஓதிப் புகழ்வமெனில் - நம்முள்
ஒழுக்கம் நேராதோ ?

சக்தி ஒருமையினாள் - பல
சாற்றும் வகைமையினாள் !
முக்தி தருமுனமே - நமை
முயல வைத்திடுவாள் !
சக்தி நெருப்பாவாள் - அதில்
சாந்தம் பிறக்குமடா !
பக்தி திரியாயின் - அதில்
பார்ப்ப திவளுருவே !

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:21 am)
பார்வை : 59

மேலே