கவிதை ஒளி நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கவிதை ஒளி!
நூல் ஆசிரியர் :
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம்,
23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கம் : 198, விலை : ரூ. 130. பேச : 044 24342810 / 24310769
*****
‘கவிதை ஒளி’ நூலின் தலைப்பைப் படித்ததுமே மனதில் ஒளி உண்டாகின்றது. கவிதை என்ற ஒரே சொல்லில் விதை, கதை என்ற சொற்களும் அடக்கம். கவிதை ஒளி என்ற இந்த நூலின் மூலம் வாசகர்களின் உள்ளத்தில் கவிதை ஒளி பாய்ச்சி வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறப்புநிலை பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்களின் அணிந்தரை நூலின் மகுடமாக விளங்குகின்றது. நூலின் முதல் பகுதியான கவிஆளுமைகளில்
8 கட்டுரைகள்,இரண்டாம் பகுதி கவிதைக்கீற்றுகளில் 7 கட்டுரைகள், மூன்றாம் பகுதி சங்க சித்திரங்களில் 7 கட்டுரைகள் ஆக மொத்தம்
22 கட்டுரைகள் நூலில் உள்ளன. நூலின் முதல் கட்டுரை தற்போது நூற்றாண்டு விழா நடைபெற்று வரும் 'பொய் சொல்லா மாணிக்கம்' என்று அழைக்கப்பட்டவர் படைப்பு பற்றி “உவமைக்கோர் வ.சுப. மாணிக்கனார் கட்டுரை விளக்குகின்றது. உவமை என்றதும் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் நினைவு வந்தது. வ.சுப. மாணிக்கனார் அவர்களும் உவமையின் அரசராக விளங்கி வந்துள்ளதை எடுத்து இயம்பி விளக்கி உள்ளார்.
“பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால்
கிழம்போகும் கீம்மையும் போம்” (461)
சங்கப்பனுவல் சுவையும் ஊட்டமும் அமைந்த நல்ல பழத்தைப் போன்றதாம். அதனைக் கற்றால் கற்பவரின் முதுமை போகுமாம் ; கீழ்மைப் பண்பும் நீங்குமாம் ; ‘கிழம் போகும் என்றதால் முதியோர் தம் முதுமை நீங்கிப் புத்திளமை கொள்ள பொருந்திய வழி இது என்றார் ஆயிற்று”.
சங்கத்தமிழ் என்பது கனிகள் போன்று இனிமையானது. பழம் உண்டால் இளமையாக இருப்பது போலவே சங்கத்தமிழ் படித்தால் எப்போதும் இளமையாக இருக்கலாம். கெட்ட எண்ணங்களும் ஒழியும் என்பதை மிகச் சிறந்த ஆளுமையாளர் வ.சுப. மாணிக்கனார் அன்று எழுதியதை இன்று மேற்கோள் காட்டி எழுதி வ.சுப. மாணிக்கனார் அவர்களுக்கு மகுடம் சூட்டி உள்ளார் நூலாசிரியர்.
முத்தமிழ் என்பது போல ஒரே நூலில் மரபு, புதிது, ஹைக்கூ என்பது மூன்று வகை பா வடிவங்களில் படைப்பாளிகள் வடித்த பாக்களில் இருந்து தேர்ந்தெடுத்து மைசூர் பா போல் வழங்கி உள்ளார் நூலாசிரியர். இன்றைய இயந்திரமயமான உலகில் தொலைக்காட்சி வருகை, அலைபேசி வருகை காரணமாக வாசிக்கும் நல்ல பழக்கம் வழக்கொழிந்து வருகின்றது. மிகச்சிலர் தான் நூல்களை விரும்பி வாசித்து வருகின்றனர். அவர்களும் எல்லா நூலகளையும் வாங்கி வாசிப்பது இயலாது. இந்த நூலில் உள்ள 22 கட்டுரைகள் படித்தால் 22 நூல்கள் படித்த நன்மை கிடைக்கும். பழத்தைப் பிழிந்து பழச்சாறு தருவது போல படைப்புகளில் பிழிந்து இலக்கியச்சாறு தந்துள்ளார்.
கவிதை ஒளி படிக்கும் போது படிக்கும் வாசகர்களுக்கு மனதில் ஒளி உண்டாகும் ; மனதில் ஒளி உண்டானால் செயலில் ஒளி உண்டாகும் ; செயலில் ஒளி உண்டானல் முகத்தில் ஒளி உண்டாகும் ; மொத்தத்தில் கவி இன்பம் தந்து மன இருள் நீக்கி அறிவொளி பாய்ச்சிடும் நூல்.
எண்பது வயது கடந்து முதுபெரும் படைப்பாளி ஈரோடு தமிழன்பன் அவர்களின் படைப்பு பற்றிய ஆய்வுக்கட்டுரையும் நூலில் உள்ளது. அவருடைய ஐந்திணை ஹைக்கூ பற்றிய ஆய்வுக்கட்டுரை மிக நன்று.
அருவிக்கு ஏது இப்படி? / நறுமணம் ? / குளித்துவிட்டுப்
போயிருப்பாள் அவள்?
இந்த ஹைக்கூவைப் படிக்கும் அனைவருக்கும் கூந்தலுக்கு மணம் உண்டா? இல்லையா? என்று வாதிட்ட திருவிளையாடல் திரைப்படம் நினைவிற்கு வந்து விடும். ஒன்றைப் படிக்கும் போது அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வரவேண்டும். அது தான் படைப்பாளியின் வெற்றி. இந்த நூலில் படைப்பாளி ஈரோடு தமிழன்பன் அவர்களும் மேற்கோள் காட்டி ஆய்வுக்கட்டுரை வடித்த தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் வெற்றி பெறுகின்றனர்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த, இராம. குருநாதனின் கவிதை உலகு பற்றிய கட்டுரையும் உள்ளது. இன்றைக்கு தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலந்து பேசி தமிங்கிலம் பரப்பி வரும் தமிழர்களுக்கு பேராசிரியர் இராம. குருநாதன் அவர்களின் இரண்டு வரிகளே போதும்.
என்ன இல்லை தமிழ்மொழியில்
எண்ணிப் பார்க்க வேண்டாமா?
இந்த வரிகளைப் படித்த போது நான் எழுதிய இரண்டு வரிகள் என் நினைவிற்கு வந்தது.
என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்.
தமிழ் பெரியசாமி அவர்களின் ஆத்திச்சூடியை ஆய்வு செய்து எழுதிய கட்டுரை நன்று.
அரிமாத் திறன் கொள்; கணிப்பொறி கற்றிடு; தூக்கம் அளவுசெய்; நேற்றினும் உயர்வாய்; நோக்கம் உயர்வு செய்; பிழை கண்டு
ஆர்த்தெழு; தடைகளை உடைத்தெறிந்து, பூக்களை படித்தல்செய் ; பெற்றோரைப் பேண் ; மொழி பல பயில் ; விதியென ஒடுங்கேல் ; வெற்றியில் பணிவு கொள் ; வையம் உனதறி!
ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெற, வள்ளுவர் சொன்னபடி வாழ்வாங்கு வாழ்ந்திட, சாதனைகள் நிகழ்ந்திட வழி சொல்லும் விதமாக வைரச்சொற்களால் வடித்திட்ட வாழ்வியல் மொழிக்கு நூலாசிரியர் வடித்திட்ட விளக்கம் மிக நன்று.
பெங்களூருவில் பாவாணர் பாட்டரங்கின் பொறுப்பாளராக இருந்து தமிழ் வளர்த்து கவிதை பாடி வரும் பன்முக ஆற்றலாளர் இராம. இளங்கோவன் படைப்புகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை மிக நன்று.
எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பேசும் போது குறிப்பிட்டார். புதுக்கவிதையின் தாத்தா மேத்தா அவர்கள் சொன்னது விமர்சனம் பற்றி,: விமர்சனம் என்பது துடுப்பாக இருக்க வேண்டும். தடுப்பாக இருக்கக் கூடாது. ஆம் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் நூல் அணிந்துரைகளும், விமர்சனங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் படகில் செல்லும் படைப்பாளியை முன்னெடுத்துச் செல்லும் துடுப்பாகவே இருக்கும். தடுப்பாக இருக்காது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நூல் உள்ளது.
கவிதை உறவு, மனித நேயம், புதுகைத் தென்றல் போன்ற இதழ்களில் மாதந்தோறும் தவறாமல் கட்டுரைகள் எழுதி வருபவர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள். இதழ்களில் படித்து இருந்தாலும் மொத்தமாக நூலில் படிக்கும் போது சுவை அதிகம். எழுத்து, பேச்சு என்ற இரு துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார், பாராட்டுக்கள்.. 'ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்'. என்பார் தந்தை பெரியார். ஓய்வும் சோர்வும் என்னவென்றே அறியாது தொடர்ந்து இயங்கி வருபவர் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள்.
இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை காலேஜ் ஹவுசில் மாநாடு போல நடந்தது. பேச்சாளர்கள் மிகுதியாக இருந்ததால் காலம் நீட்டித்து விட்டது. நிறைவாக நான் நன்றியுரை.
“முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதியது போல, தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் அருகே, அவர் எழுதிய நூல்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்கும்” என்றார். அப்படிப்பட்டவர் இன்று இரண்டு நூல் எழுதியுள்ளார். எல்லோரும் எழுந்து நின்று கரவொலி தாருங்கள், அனைவருக்கும் நன்றி, என்று சொல்லி முடித்தேன். விரைவாக முடித்தமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
முதுபெரும் வ.சுப. மாணிக்கனார் தொடங்கி, கவிஓவியா ஆசிரியர் இளையவர் இளையபாரதி வரை படைப்பாளிகளில் பாரபட்சம் பாராமல் எல்லோருடைய படைப்புகளையும் ஆழ்ந்து வாசித்து ஆழ்ந்து சிந்தித்து நூல் எழுதி உள்ளார். கதை, கட்டுரை, கவிதை மூன்றில் கவிதைக்கு சிறந்த இடம் என்றுமுண்டு. அப்படிப்பட்ட கவிதைகளில் உள்ள சிறப்பை எடுத்து இயம்பி நூல் வடித்துள்ளார்.

மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை முனைவர் இரா. மோகன் அவர்கள். “தமிழ் உன்னை வளர்த்தது, வளர்த்த தமிழுக்குத் தொண்டு செய்” என்று மு.வ. அவர்கள் எழுதித் தந்த வைர வரியை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு தமிழன்னைக்கு மாதந்தோறும் நூல் அணிகலன் பூட்டி வருகிறார், பாராட்டுக்கள்.
.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (23-Aug-17, 6:29 pm)
பார்வை : 290

சிறந்த கட்டுரைகள்

மேலே