தேடல்
தேடல் . .
எனக்குள் ஒளிந்திருக்கும்
எனது அடையாளங்களின்
தேடலில் நான் . .
எனக்கென அரணாய்
ஒர் சிறு கூடு அல்ல . .
எம்மரக் கிளையிலும்
அச்சமறக் கண்ணுறங்கும்
ஏக்கத்தில் என் தேடல் . .
என் தோல்விகளுடன்
புதைய பதை பதைக்கும்
முயற்சிகளை
என் வியர்வைகள்
வேர்விட்டு
தக்கவைக்க
நீருற்றி போகின்றன
என் தேடல்கள் . . .
திக்கறியா
திரைகடலில்
ஆழ்ந்த இருள்தன்னில்
எனக்கென ஓர் தடத்தை
வெளிச்ச ரேகைகளாய்
உமிழ்கின்றன
என் தேடல்கள் . .
யாரோ எரித்து வைத்த
சுள்ளியில்
குளிர்காயாது
எனக்கென்றே
ஓர் சூரியனை
கண்டறியும் உத்தியில்
அண்டம் மீறிச்
செல்கின்றன
ஆசையை விரித்து
என் தேடல்கள் . . .
சு.உமாதேவி