வைஷ்ணவம் நாரணன் --நாரணம் ---மாயோனும் சேயோனும் --ஆன்மிகம் -- சங்கத் தமிழ் வலைப்பூ --படித்தது

* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் (வடமொழியில்)
-ன்னு சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்! இன்னிக்கி அதைக் கொஞ்சம் விரிவாப் பார்க்கலாம்! அவரவர் சார்பு நிலைகளைக் கழற்றி வச்சிட்டு, "மெய்ப் பொருள்" காண்பதாகவும் பார்க்கலாம்! என்ன வாரீங்களா? :))

அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு!
பதிவின் நோக்கம்: எல்லாம் கடந்த இறைவனை, வெறுமனே மொழிக் குறுகலுக்குள் அடைப்பது இல்லை!
ஆனால் ஆன்மீகம் எப்படி முக்கியமோ, அதே போல் மொழியும், அதைச் சார்ந்த இனமும், அங்கு இறையியல் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பதும் முக்கியம்!
நம் தமிழில், நம் இறையியல் என்ன? என்பதான வேர்களைத் தேடும் முயற்சியே இது! இனி மேலப் படிங்க! :)

--------------------------------------------------------------------------------



"நாரணம்" என்ற பெயரே கொஞ்சம் சிக்கலானது தான்!
பல உண்மைகளை உள்ளடக்கியது! ஒரு நல்ல அழகான தொன்மையான தமிழ்ச் சொல்லைப் பார்த்து, "இது தமிழ்ச் சொல் தானா?" என்று கூட கேட்க வைப்பது! ஹா ஹா ஹா :))

என் முருகப் பெருமானுக்கு இந்தக் கஷ்டமே இல்லை! முருகன்=அழகன்-ன்னு ஈசியா சொல்லிட்டுப் போயீரலாம்! அம்புட்டு எளிமையானவன்! செல்லமானவன்! :)
ஆனா இவரு "ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்" ஆச்சே! அதான் பதிலுக்கு இவரையும் ஆராயும் படி வச்சிட்டாங்க போல! நல்லா வேணும்-ப்பா ராசா உனக்கு! :)

--------------------------------------------------------------------------------

தமிழ்-வட பண்பாட்டுக் கலப்பின் போது, இரண்டு பக்கமும் பரிமாற்றங்கள் நடந்து கொண்டன! மாயோனும் சேயோனும் தமிழ்க் கடவுளர்கள்! இதோ அதற்கான விவரணப் பதிவு!
மாயோன்-சேயோன் = நாட்டு வழக்காக பெருமாள்-முருகன்!
மாயோன்-சேயோன் = விஷ்ணு-ஸ்கந்தன் என்று ஆகி வடக்கே சென்றனர்!

* ஆனால் போன இடத்தில், மாயோன் என்ற விஷ்ணுவைக் கொண்டாடிய அளவுக்கு, ஏனோ சேயோன் என்னும் ஸ்கந்தனை அதிகம் கொண்டாடவில்லை!
* முல்லை நில முதல்வனை, மும்மூர்த்திக்குள் ஒருவராய் வைக்க முடிந்த அளவுக்கு, குறிஞ்சி நில முதல்வனை ஏனோ வைக்கவில்லை!



இத்தனைக்கும் முல்லையின் கண்ணன் கருப்பு! குறிஞ்சியின் முருகன் தான் வெள்ளை! :)

ஒரு வேளை, கண்ணனை ஒத்திருந்த கதைகள் அங்கு ஏற்கனவே இருந்ததோ என்னவோ, இயல்புக்கும் இணைப்புக்கும் ஈசியாய் இருந்தது போலும்!
ஆனால் ஸ்கந்தனுக்கு "முதன்மை" காட்டவில்லையே தவிர, ஸ்கந்த புராணம், தேவர் படைத் தலைவன், பிரணவம் சொன்னவன் என்று அவர்களும் ஏற்றுக் கொண்டு போற்றத் தான் போற்றினர்!

இங்கிருந்த போது, இயற்கை முறைப்படி இருவருக்குமே இயல்பான மனித உருவம் தான்!
அங்கு சென்றவுடன், நான்கு கரம்/பன்னிரு கரம், ஒரு முகம்/ஆறு முகம் என்று வேறு விதமான பரிணாம வளர்ச்சி! :)

இங்கிருந்து சென்ற இரு குழந்தைகள்! அங்கு ஒரு குழந்தை மாநிலத்துக்கே முதல்வராகி விட்டது! இன்னொரு குழந்தை மாநகரத்துக்கு மட்டும் கமிஷனர் ஆகி விட்டது! :)
* அவர்கள் ரொம்பவும் ஏற்றுக் கொள்ளாத குழந்தை "மட்டுமே", இனிமேல் என் குழந்தை!
* அவர்கள் அதிகம் ஏற்றுக் கொண்ட குழந்தை, இனிமேல் என் குழந்தை அல்ல! - என்று தமிழ்த் தாய் சொல்வாளா?

அப்படி ஒரு தாய் சொல்லுவா-ன்னு சொல்றவங்க கையைத் தூக்குங்க ப்ளீஸ்! :))))))
நினைவில் வையுங்கள்: எங்கு சென்றாலும், எப்படி இருந்தாலும், மாயோனும் சேயோனும் என்றென்றும் தமிழ்க் கடவுளரே!

--------------------------------------------------------------------------------

* நாரணம் = நாரம் + அணம் = நீர் + வழி (தமிழில்)
* நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் (வடமொழியில்)

சரிப்பா, இலக்கியத்தில் மாயோன் = இன்றளவும் திருமால் = நாட்டு வழக்காய் பெருமாள்! தமிழ்க் கடவுள் தான்! ஒப்புத்துக்கறோம்!
ஆனால் "நாரணம்" எப்படி தமிழ்ச் சொல் ஆகும்? அதைப் "பார்த்தாலே" வடமொழி மாதிரி-ல்ல இருக்கு? :)))))
அதுக்கு பதில் சொல்லு கேஆரெஸ்! அதை விட்டுட்டு, நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற? :)

நாரணம் என்பது தமிழ்ச் சொல்லே! வட சொல் அல்ல!
அது மாயோனின் பெயர் என்பதை விட, அவன் தத்துவத்தைக் குறிக்க வந்த சொல் என்பதே இன்னும் பொருத்தமாக இருக்கும்!

அவன் பெயர்களான "மாயோன்", "திருமால்" என்ற சொற்களே தொல்காப்பியம் மற்றும் இலக்கியங்களில் எல்லாம் மிக அதிகமாகப் புழங்குமே தவிர,
தத்துவமான "நாரணம்" என்னும் சொல் அதிகம் புழங்காது! இருப்பினும் அதுவும் சங்க இலக்கியத்தில் ஆங்காங்கே குறிக்கப்பட்டுத் தான் உள்ளது!

கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
"நாராயணா" என்னாத நா என்ன நாவே? - என்பது சிலப்பதிகார வரிகள்!

காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் "நாரணன் காப்பு" என்று உரைத்தனன் - என்பது மணிமேகலை வரிகள்!

இப்படி தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் "நாரணம்" என்பதற்குப் பொருள் தான் என்ன?

--------------------------------------------------------------------------------



குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ


முதலில், தமிழ்-ல அணம்-ன்னா என்ன? = வழி/அருகில் சேர்த்தல் என்று பொருள்!
* இலக்கணம் = இலக்கு + அணம் = மொழியின் இலக்குக்கு "வழி" சொல்வது = Grammar
* காரணம் = கார் + அணம் = கருவுக்கு(Core) "அருகில்" செல்வது = Reason
* ஏரணம் (Logic) = ஏர்(ஏல்) + அணம் = ஏற்றுக் கொள்ளலுக்கு "வழி" சொல்வது = Logic
* நாரணம் = நார் + அணம் = நாரம்(நீர்மை)-க்கு "வழி" சொல்வது!

அணம் = அண்மை என்பதின் வேர்ச்சொல்! அண்மை = அருகில்!
சில சமயம் தொழிற்பெயர் விகுதியாகவும் இது வரும்!
கட்டணம், பொக்கணம், தக்கணம் (தக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்-ன்னு வருது இல்லையா? அதைப் போல-ன்னு வச்சிக்குங்களேன்)

அணம் என்றால் வழி (அ) அருகில் இட்டுச் செல்வது-ன்னு பார்த்தோம்! அப்போ, நாரம் என்றால் என்ன?

--------------------------------------------------------------------------------

* நாரம் = நீரம் = நீர்மை = நீர்
* ஆனால் நாரம் = நாளம் = கருமை என்று கொள்வாரும் உண்டு!

நாளம் என்பதே நாரம் ஆனது என்று சில தமிழ் அறிஞர்கள் கருதுவர்!
காளி=காரி ஆவது போல் நாளம்=நாரம் ஆகிறது! நாள் = இரவு = கருமை!

சங்கத் தமிழில் நாள்-ன்னா இரவு! நாள்->நள்! நள்ளிரவு-ன்னு சொல்றோம்-ல்ல?
இன்னிக்குப் பேச்சு வழக்கில் வேணும்-ன்னா, நாள் என்பது பகலும் இரவும் சேர்ந்த ஒன்று-ன்னு இருக்கலாம்!
ஆனால் பண்டைத் தமிழில், நாள் = இரவு! அந்த இரவால் "பகு"க்கப்படுவது பகல்!

* கருமையான தமிழ்க் கடவுள் மாயோன் = நாள்!
* அவன் அண்மையில் செல்வது = அணம்!
* நாரம் + அணம் = நாரணம்!
ஆனால் நாரம் என்பதற்கு "நீர்மை" என்ற பொருள் தான் தமிழில் மிகவும் பொருந்தி வருகிறது!

= "நாரம்" உண்டு எழுந்தன மேகங்காள்
= நதியின் பெருவலி "நார்" வலி தானே
= நளிர் கடல் "நாரம்" நா உற வேட்கையின் பருகிய மேகம்
= நலங்கொள் பைங்கதிர்க் கிரியிடை சரிந்தன "நாரம்"
= கடிகொண்ட "நாரம்" அனையன் கொணர்ந்து கரம் உய்ப்ப நுங்கி யெழுவான் (கந்த புராணம்)
என்று இலக்கியங்களில் எல்லாம் "நாரம்" வருகிறது! நாரம் = நீரம் என்பதே நீர் தொடர்புடைய ஒன்று தான்!

* "நாரத்தை" செடி தெரியும் தானே? மிகுந்த சாறு(நீர்மை) உள்ள பழம் இந்த நாரத்தை!
* "நாரை" என்பதும் நீர் வாழ் பறவை தான்!
* "நார்"ச் சத்து-ன்னு சொல்வாங்களே! அதாச்சும் Dietary Fibre! செடிகளில் நீரை உறிஞ்சிச் சேர்க்கப்படும் சத்துக்கு நார்ச்சத்து என்றே பெயர்! பழமும் ஈரமா, நார் நாரா இருக்கும்! Fibre சத்து "கரைக்க" வல்லது! ஜீரணம் (அ) உணவுக் கரைசலுக்கு உகந்தது!

--------------------------------------------------------------------------------

இப்போது புரிகிறது அல்லவா?
* நாரம் = நீர்மை (அ) நீர்த் தன்மை!
* அணம் = அருகில் செல்லல் (அ) அப்படிச் செல்லும் வழி!

ஏன் இந்த நீர்மை? = பரிணாமக் கொள்கையின் படி, முதல் உயிரினம், நீரில் தான் தோன்றியது! பின்பு தான் ஒவ்வொன்றாகப் பரிணாம வளர்ச்சி!
எவ்வளவு பரிணமித்தாலும், எல்லா உயிர்களுக்கும் நீர் கட்டாயம் தேவை! இன்றும் மனித உயிர்கள் கர்ப்பத்து "நீரில்" மிதந்து விட்டுத் தான் பிறக்கின்றன!

நீர் இன்றி அமையாது உலகு என்பது குறள்!
அது போல் அவன் இன்றி அமையாது உலகு என்பதால் நீரணன்! நாரணன்!

ஊழி என்பது இயற்கைச் சுழற்சிப் பரிணாமம்! அதைப் பரிபாடல் காட்டுகிறது!
1. ஆகாய ஊழி = Big Bang
2. காற்று ஊழி = ஆகாயத்தில் இருந்து காற்று
3. நெருப்பு ஊழி = காற்றில் இருந்து நெருப்பு
4. நீர் ஊழி = நெருப்பில் இருந்து நீர்
5. மண் ஊழி = "நீரில்" இருந்து உயிர்கள்!

...பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
ஊள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்
...
ஊழி யாவரும் உணரா
"ஆழி முதல்வ" நிற் பேணுதும் தொழுதும்
என்று ஊழி முதல்வனாய், ஆழி முதல்வனைக் காட்டுகிறது பரிபாடல் செய்யுள்!

தானோர் உருவே தனிவித்தாய்த்
மற்றும் மற்றும் முற்றுமாய்
தானோர் "பெருநீர்" தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா"மாயோன்"

இப்போது புரிகிறது அல்லவா?
* நாரம் = நீர்மை! அணம் = அருகில் செல்லும் வழி!
* நீர்-மையுள்ள மாயோனுக்கு அருகில் செல்வது = நாரணம்!

--------------------------------------------------------------------------------

மேலே உள்ள "நீர்"-மைக் கருத்துக்கள் பற்றித் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் பின்னூட்டத்தில் உரையாடுங்கள்! இதற்கு செம்மை சேர்க்க உதவுங்கள்!

இப்போ வடமொழியில் "நாராயணம்" பற்றியும் கொஞ்சம் லேசுமாசா பாத்துருவோம்!

அட, அப்படிப் பார்க்கலீன்னா என் கதி அதோ கதி தாங்க! பந்தல் சாஸ்திர விரோதமானது-ன்னு சில ஆன்மீக அன்பர்கள் என்னைய ஒதுக்கியே வச்சிருவாங்க! :))
இராமானுசன் என்று தான் நாலாயிரப் பாட்டில் கூட வருது!
ஆனா, ஏதோ நான் தான் வேணும்-ன்னே, இராமானு"ஜ"ன் என்று எழுதாம, இராமானு"ச"ன்-ன்னு எழுதறேன்-ன்னு ஏற்கனவே கோப தாபங்கள் வேற இருக்கு! :)

அது என்னமோ தெரியலை, மத்தவங்க என்ன வேணும்-ன்னாலும் சொல்லலாம்! ஆனா கேஆரெஸ்-ன்னா மட்டும் எல்லாருக்கும் நல்ல பிள்ளையா நடந்துக்கணும்-ன்னு ஒரு "எதிர்பார்ப்பு"! அப்படி நடந்துக்கலீன்னா "மனக்கசப்பு"! என்ன கசப்போ போங்க! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே! :))
எது-ன்னாலும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், "மெய்ப்" பொருளை
1. அறிய விழைவதும்,
2. அறியத் தருவதும்,
3. அறியக் கேள்வி கேட்டு, ஐயம் நீங்க உரையாடுவதும் கூட "பகவத் கைங்கர்யமே"!

--------------------------------------------------------------------------------


நாராயணம் = நாரம் + அயணம் = நீர் + இடம் = நீரை இடமாகக் கொண்டவன் (வடமொழியில்)
-> நாரம் = அனைத்துக்கும் மூலமான நீர்! பிரளய ஜலம் முதற்கொண்டு அனைத்து நீர் ஆதாரங்களுக்குமான ஆதாரம்! ஆபோ "நாரா" இதி ப்ரோக்தா...பூர்வம் தேன "நாராயண" ஸ்மிருதா:
-> அயணம் = இடம் (இடத்துக்கு வருதல்)! இராமாயணம், உத்தராயணம், தக்ஷிணாயணம்-ன்னு எல்லாம் சொல்றாங்க-ல்ல?

கிட்டத்தட்ட, தமிழில் பார்த்த "நாரணம்" என்பதற்கு என்ன பொருளோ, அதே பொருள் தான் "நாராயணம்" என்று வடமொழியிலும் இருக்கு!

இது போல் தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்ட வடமொழிச் சொற்களை இராம.கி ஐயா பல பதிவுகளில் சொல்லி இருக்கார்! ஆதி, பகவன் போன்ற பல தமிழ்ச் சொற்களைப் போலவே நாரணம் என்பதும் ஒன்று!

--------------------------------------------------------------------------------

வடமொழியில் இன்னொரு பொருளும் "நாராயணம்" என்பதற்குச் சொல்லப்படுவது உண்டு! இதை மகான் ஆதி சங்கரரும் தனது சங்கர பாஷ்யம் என்னும் உரை நூலில் உறுதிப் படுத்துகிறார்!

* நரம் = மனிதன்/உயிர் "தான்" என்னும் செருக்கு/உணர்வு உள்ள உயிர்!
* நாரம் = உயிர்கள்! ஒட்டு மொத்த நரமும் சேர்ந்தால் நாரம்!
* அயணம் = இடம் புகல்-இடம்/தஞ்சம்

மொத்த நரத்துக்கும் புகல்-"இடமாய்" இருப்பது எதுவோ, அதுவே நாராயணம்! அதுவே பரம்!
நாராயண பரோ ஜோதிர், ஆத்மா நாராயண பரோ!
நாராயண பரப் பிரும்ம, விஸ்வ ஆத்மனம் பராயணம்! - என்பது வேதம்!

சைவக் குடும்பத்தில் வந்துதித்த ஆதி சங்கரரும், வேதங்களுக்கு உரை நூலான தன்னுடைய பாஷ்யத்தில், "நாராயண" பரம் என்று சொல்லியே ஆரம்பிக்கிறார்!
நாராயண பரோ வக்யாத், அண்டம் அவ்யக்த சம்பவம்! என்று தான் சங்கர பாஷ்யமே தொடக்கம்!

--------------------------------------------------------------------------------

இப்படி, நம் செந்தமிழிலும், வடமொழியிலும் "நாரணம்" என்பது நீர்-மையை ஒட்டியே பேசப்படுகிறது! ஏன்?

Water is colorless, odourless, tasteless, formless!
Yet will take color, odour, taste, form!
* நீர், கொள்ளும் கலத்துக்கு ஏற்ற வடிவம் பெறுவது போல்,
* நாராயணன், நாம் எப்படிக் கொள்கிறோமோ, அப்படி வடிவம் கொள்கிறான்!

ஆவியான மேகத்தின் நீர்,
கடலில் இருந்து வந்த உப்பு நீரா? ஆற்றில் இருந்து வந்த நல்ல நீரா?
குட்டை நீரா? கூவம் நீரா? என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாதபடி இருப்பது போல்...

இறைவனின் நீர்-மையில் சேரும் உயிர்களை,
நல்லவர்-தீயவர், தேவர்-அசுரர், ஆண்-பெண், சாதி-மதம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவே முடியாது!
அனைவரும் அடியார்களே! பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே!

அதான் ஆலயங்களிலும் தீர்த்தமாக, அவனையே பருகத் தருகிறார்கள்! = நீர்-மையான அவனை, நம்முள், உள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்! விளக்கப் பதிவு இங்கே!

இப்படி நீர் இன்றி அமையாது உலகு என்னும் படிக்கு,
நீராகப் பரவி நிற்கும்...நீர்-மையான்...
"நீராயணன்-நாராயணன்" திருவடிகளே சரணம்!

கோபுரத்தின் மேல் இருந்து, குருவையும் மீறி, ஊருக்கே அப்படி என்ன தான் சொன்னாரு? ஓம் நமோ Dash கேட்டு ஊரே திருந்திருச்சா? :).....

எழுதியவர் : (29-Aug-17, 12:23 pm)
பார்வை : 122

மேலே