பொலபொலவென்று கண்ணீர் விட்டு
பொலபொலவென்று கண்ணீர் விட்டு
பொலபொல வென்றே கண்ணீர் விடுகின்றாள்
சலசலப்பு அடங்கியதே சற்றுநேரம் தன்உறவுகளை
மளமளவென்று பார்த்து மருகியுமே போகின்றாள் .
கலகலப்பாய் சிரித்துமகிழ்ந்த பொழுதுகளை நினைக்கின்றாள் !
மணநாளின் பந்தமாக மணக்கோலம் பூணுகின்றாள்
கணமான மனத்துடனே காரிகையோ செல்கின்றாள் .
குணவதியோ அழுகின்றாள் குடும்பத்தைப் பிரிந்திடவே
திணறுகின்றாள் கண்டீரோ திக்கெல்லாம் புதியவர்கள் !
பெற்றோரை விட்டுவிட்டு பெரியதொரு வாழ்க்கையினை
உற்றோர்கள் சபைதனிலே உருவாக்கும் மங்கலநாண்.
கற்பித்த அறநெறியை கலைமகளும் கைபிடித்து
நற்றவமாம் இல்லறத்தை நாடுகின்றாள் மனத்துன்பில் !!!
உறவுகளைப் பிரிகின்றாள் உன்னதமான பெற்றோரை
மறவாது மனத்தினிலே மனக்கண்ணில் பார்க்கின்றாள் .
திறவாத வாயினுள்ளே திணறடிக்கும் சோகங்கள் !
பிறந்தாலே பெண்ணாக பிறந்தவீடும் இல்லையினி !
வேற்றிடமே பெண்களுக்கு வேறுயில்லை உலகினிலே
மாற்றங்கள் உண்டாமே மங்கையிவள் வாழ்வினிலே .
காற்றகித் தென்றலாகிக் காலமெல்லாம் கணவனுக்காய்
சீற்றங்கள் காட்டாது சீர்பெறவே நடந்திடுவாள் !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்