தாயின் ஆண்பால்
இரவெல்லாம் பெய்த மழையால்,
நீர் திவலைகள் வீட்டு கூரையிலிருந்து,
சொட்டு சொட்டாய் விழுந்து கொண்டிருக்கிறது..
கோப்பைகளும் குவளைகளும் நிறைந்த பின்னர்,
அதீதமான மழைநீர் வீடெல்லாம் நீச்சலடித்து கொண்டிருக்கிறது..
உணவு தேவைகளையும்,
மலம் ஜலம் கழிப்பதையும்,
எங்கே நிவர்த்தி செய்வதென யோசிப்பதற்குள்,
மீண்டும் அடை மழையொன்றை வரவேற்க்க இடி இடித்து முன்னறிவிப்பு செய்கிறது,.
தாயற்ற குழந்தையை வாரியணைத்து நெஞ்சோடு பிணைத்து கொண்ட பின்னும்,
ஒட்டிய வயிற்றுடனும் நித்திரையற்ற விழிகளுடனும்,
பாலுக்காக விசும்பும் சிசுவை எப்படி சமாதனப்படுத்துவதோ..
வீறிட்டு அழுவதை பார்க்கும் போது
தட்டையான எனது மார்பகங்களில் ஒரு துளி பால் சுரக்காதா என ஏங்குகிறான் தந்தையானவன்...